ராமநாதபுரம், மார்ச் 14: ராமநாதபுரம் மாவட்டம் சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் சார்பாக கலெக்டர் அலுவலகம் நுழைவு வாயில் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சி.பி.எஸ் திட்டத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். சிபிஎஸ் திட்டத்தில் ஓய்வு பெற்ற, இறந்த, ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு பணிக்கொடை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.அப்போது மதுரை-ராமேஸ்வரம் சாலையில் 50க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.
அவர்களை போலீசார் தடுத்து 18 பேரை கைது செய்து, மாலையில் விடுவித்தனர். இதுபோல் மண்டபம், ராமநாதபுரம், திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம், போகலூர், நயினார்கோயில், பரமக்குடி, கமுதி, முதுகுளத்தூர், கடலாடி மற்றும் திருப்புல்லாணி ஆகிய 11 யூனியன் அலுவலகங்களில் அரசு ஊழியர்கள் பணிக்கு வராததால் அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டது. பல்வேறு உதவிகளை பெற அலுவலகம் வந்த பொதுமக்கள் திரும்பிச் சென்றனர்.