மல்லசமுத்திரம், ஜூலை 5: மல்லசமுத்திரம் அருகே மர்ம விலங்கு கடித்து குதறியதில் 28 வளர்ப்பு வெண் பன்றிகள் உயிரிழந்தது. நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் அருகே அத்தப்பம்பட்டி பூசாரிக்காட்டில் வசிப்பவர் சதீஷ்(47). விவசாயி. இவர் சொந்தமாக அரசு அனுமதி பெற்று, இவருடைய தோட்டத்தில் ஒன்றரை ஏக்கர் பரப்பளவில், 500க்கும் மேற்பட்ட வெண் பன்றிகள் வளர்ப்பை, கடந்த 2013ம் ஆண்டில் இருந்து தொழில்செய்து வருகிறார். இவர் கேரளாவில் உள்ள எர்ணாகுளத்திற்கு அரசு நிறுவனத்திற்கு வெண்பன்றிகளை கிலோ ரூ.175 வீதம் விற்பனை செய்து வருகிறார். இவரது தோட்டத்தில் நேற்று முன்தினம் பராமரிப்பு பணிகளை முடித்து கொண்டு, வேலையாட்கள் வீட்டுக்கு சென்று விட்டனர். மாலை 5மணி அளவில் தோட்டத்தில் உள்ள பண்ணைக்கு திடீரென மர்ம விலங்கு புகுந்து, 28 வெண்பன்றிகளை கடித்து குதறியதில் பலியானது.
இதன் சத்தம் கேட்டு அருகில் வசிப்பவர்கள் வந்து பார்த்தனர். பின்னர் சதீசுக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் கால்நடை துறை மருத்துவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து இறந்த பன்றிகளை பரிசோதனை செய்தனர். இதையடுத்து அருகேயுள்ள தோட்டத்தில் குழி தோண்டி ஒரே இடத்தில் பன்றிகளை புதைத்தனர். இதுகுறித்து தகவலறிந்த ஈஸ்வரன் எம்எல்ஏ நேரில் சென்று பாதிக்கப்பட்ட விவசாயிக்கு ஆறுதல் கூறினார்.இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், இந்த பகுதியில் ஆடு, மாடு, கோழி போன்ற கால்நடைகளை வளர்ப்பதற்கு மிகுந்த அச்சமாக உள்ளது. அருகில் புதர்கள் நிறைந்த பகுதியாக உள்ளது. எனவே மர்ம விலங்கை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்றனர்.