தர்மபுரி, மே 30: தர்மபுரி மாவட்ட மருந்து சேவை கழகம் துறையில், மாவட்ட மருந்து கிடங்கு அலுவலராக, 40 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்ற கதிர்வேலுவுக்கு, பணி நிறைவு பாராட்டு விழா நேற்று தர்மபுரியில் நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட மருந்து கிடங்கு அலுவலர் ரிஸ்வான் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் மருத்துவக் கல்லூரி அலுவலர்கள், மருந்து கிடங்கு அலுவலர்கள், தலைமை மருந்தாளுனர்கள் மற்றும் மருந்தாளுனர்கள், உறவினர்கள், நண்பர்கள் கலந்து கொண்டு பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர். கதிர்வேலு ஏற்புரையாற்றினார். பெருமாள் நன்றி கூறினார்.
இதேபோல், தர்மபுரி மாவட்ட கால்நடை பராமரிப்பு துறையில், 41 ஆண்டு காலம் பணியாற்றி ஓய்வு பெற்ற சண்முகத்திற்கு பணி நிறைவு பாராட்டு விழா, நேற்று தர்மபுரியில் நடந்தது. நிகழ்ச்சியில் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினர். தமிழ்நாடு முதுநிலை கால்நடை மேற்பார்வையாளர் சங்கம் மற்றும் தமிழ்நாடு கால்நடை ஆய்வாளர் சங்க நிர்வாகிகள் மற்றும் அரசு அலுவலர்கள் அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.