ஊட்டி, ஜூன் 11: நீலகிரி மாவட்டத்திற்கு நாள்தோறும் பல ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இவர்கள் தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா மற்றும் படகு இல்லம் உட்பட பல்வேறு சுற்றுலா தலங்களுக்கும் செல்கின்றனர். சுற்றுலா பயணிகள் செல்லும் பகுதிகளில் பலரும் பல்வேறு வகையான பழங்கள், காய்கறிகள் போன்றவைகளை விற்பனை செய்து வருகின்றனர். இதுதவிர, கைவினை பொருட்கள் மற்றும் விளையாட்டு பொருட்கள் போன்றவைகளையும் விற்பனை செய்கின்றனர். இந்நிலையில், தற்போது இந்த வரிசையில் மருத்துவ குணம் நிறைந்த பொருட்களையும் சுற்றுலா தலங்களுக்கு முன் விற்பனை செய்ய துவங்கியுள்ளனர். ஊட்டியில் தாவரவியல் பூங்கா செல்லும் சாலையோரங்களில் தற்போது பல்வேறு வகையான மருத்துவ குணம் நிறைந்த பழங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்த வரிசையில் தற்போது கை மற்றும் கால், முட்டி போன்ற வலிகளை நீக்கும் மருத்துவ குணம் நிறைந்த முடவாட்டு கால் கிழங்கு விற்பனையையும் வியாபாரிகள் துவக்கியுள்ளனர். இந்த கிழங்கு மேட்டுப்பாளையம் அருகேயுள்ள கல்லார் பண்ணையில் இருந்து கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். ஒரு கிலோ ரூ.200க்கு விற்பனை செய்யப்படுகிறது. மருத்துவ குணம் நிறைந்த இந்த கிழங்கினை தற்போது சுற்றுலா பயணிகள் மற்றும் வியாபாரிகள் பலரும் வாங்கி செல்கின்றனர்.