ஊட்டி, ஜூலை 3: ஊட்டி அரசு மருத்துவ கல்லூரி விடுதிக்கு குடிநீர் திட்ட பணிகளுக்காக ரூ.23 கோடி தமிழக முதல்வர் வழங்கி ஆணை பிறப்பித்துள்ளார் என ஊட்டியில் நடந்த கண்காணிப்பு குழு கூட்டத்தில் ஆ.ராசா எம்பி தெரிவித்தார். ஊட்டி தமிழகம் அரசு விருந்தினர் மாளிகையில் மாவட்ட அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு, நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா தலைமை வகித்தார். அரசு கொறடா ராமசந்திரன், மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில், நீலகிரி, கோயமுத்தூர், ஈரோடு மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டு, தங்களது துறைகளின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்களின் தற்போதைய நிலை மற்றும் முடிக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்ட திட்டங்கள் குறித்தும் தெரிவித்தனர். இக்கூட்டத்தில், நீலகிரி பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், தூய்மை இந்தியா திட்டம், ஜல் ஜீவன் மிஷன், பிரதான் மந்திரி கிராம சாலைகள் திட்டம், பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம், கலைஞர் கனவு இல்லம், ஊரக பகுதிகளில் பழுதடைந்த வீடுகளை சீரமைத்தல், பழங்குடியினருக்கு வீடுகள் கட்டும் திட்டம், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டம், நமக்கு நாமே திட்டம், பொது நூலக கட்டிடங்கள், பள்ளிகள் உட்கட்டமைப்பு மேம்பாட்டுத்திட்டம், நபார்டு திட்டம், முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத்திட்டம், ஆதிதிராவிடர் வாழும் பகுதிகளை மேம்படுத்தும் திட்டம், நபார்டு திட்டத்தின் கீழ் புதிய பள்ளி கட்டிடம் கட்டுதல், 15வது நிதிக்குழு மானியத்தின்கீழ் சுகாதார கட்டிடங்கள் கட்டுதல் ஆகிய திட்டங்களின் கீழ் நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்து சம்மந்தப்பட்ட துறை சார்ந்த அலுவலர்களிடம் எம்பி., ராசா கேட்டறிந்தார்.
மேலும், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், பேரூராட்சிகள், ஓருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித்திட்டம், தோட்டக்கலைத்துறை, சமூக பாதுகாப்புத்திட்டம், தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் மக்கள் நலத்திட்டங்கள் குறித்து கேட்டறிந்தார். தொடர்்ந்து, அவர் நிருபர்களிடம் ஆ.ராசா கூறியதாவது: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, நீலகிரி மாவட்டத்தில், நடைபெற வேண்டிய மாவட்ட அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், கடந்த இரண்டு நிதியாண்டுகளாக தமிழக அரசாலும், ஒன்றிய அரசாலும் வழங்கப்பட்ட திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டதில் 95 சதவீதம் பணிகள் நீலகிரி மாவட்டத்தில் முடிவடைந்துள்ளது. மீதமுள்ள பணிகளை விரைந்து முடிக்க உரிய அறிவுரைகள் அலுவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எனவே, இம்மாவட்டத்தின் வளர்ச்சி பணிகள் திருப்திகரம் என்பதை விட பாராட்டுதலுக்குரியதாக உள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் கடந்த மாதம் நீலகிரி மாவட்டத்திற்கு வருகை தந்த போது, புதிதாக கட்டப்பட்டுள்ள மருத்துவக்கல்லூரியில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, மருத்துவ கல்லூரி மற்றும் விடுதிக்கு குடிநீர் வேண்டி கோரிக்கை வைக்கப்பட்டது. இக்கோரிக்கையினை உடனடியாக ஏற்று முதலமைச்சர், ரூ.23 கோடி செலவில் மருத்துவக்கல்லூரி மற்றும் விடுதிகளின் பயன்பாட்டிற்காக நிதி ஒதுக்கீடு செய்து அதற்கான ஆணை பிறப்பித்துள்ளார்.
மேலும், மாவட்ட அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டத்தில், நடைபெற்று வரும் பணிகளை மழைக்காலங்களுக்கு முன்பாக முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் எனவும், சரியான முறையில் திட்டமிட்டு வளர்ச்சி திட்ட பணிகளை முடிக்க வேண்டும் எனவும் அனைத்து அரசு துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து, நடைபெற்ற பொது விநியோக திட்டத்தின் காலாண்டு கூட்டத்தில், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் கலந்து கொண்டு, மின்னணு குடும்ப அட்டைகள் வாரியாக அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படும் விவரங்கள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்குகளின் கொள்ளளவு, அத்தியாவசிய பொருட்களின் இருப்பு உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டார். இக்கூட்டத்தில், ஊட்டி சட்டமன்ற உறுப்பினர் கணேஷ், கூடலூர் சட்டமன்ற உறுப்பினர் பொன் ஜெயசீலன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) அபிலாஷா கௌர், மாவட்ட வன அலுவலர் (கூடலூர்) வெங்கடேஷ் பிரபு, குன்னூர் சார் ஆட்சியர் சங்கீதா உட்பட பலர் கலந்து கொணடனர்.