தாம்பரம்: தேசிய மருத்துவர்கள் தினத்தையொட்டி எஸ்ஆர்எம் குளோபல் மருத்துவமனை 500 மரக்கன்றுகளை ஜீவிதம் அறக்கட்டளைக்கு நன்கொடையாக வழங்கியது. இதற்கான விழா, எஸ்ஆர்எம் குளோபல் மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில், மூத்த மருத்துவர்கள், பணியாளர்கள், ஜீவிதம் அறக்கட்டளையின் பிரதிநிதிகள் மற்றும் தன்னார்வலர்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சியில், எஸ்ஆர்எம் குளோபல் மருத்துவமனை தலைவர் சத்யநாராயணன் பேசுகையில், ‘‘மருத்துவர்கள் தினம் என்பது, மருத்துவ திறமையை மட்டும் கொண்டாடுவதற்கானது அல்ல, நாம் வாழும் இந்த பூமியின் ஆரோக்கியத்தை பாதுகாப்பது குறித்து சிந்தித்து செயல்படுவதற்கான தினமாகவும் இருக்கிறது. எஸ்ஆர்எம் குளோபல் மருத்துவமனையில் நோய்களை குணப்படுத்துவதோடு நின்றுவிடுவதில்லை. நோயாளியின் உணர்வு சார்ந்த ஆரோக்கியம், மனநலத்தை கண்காணிக்கிறோம். அனைவருக்கும் ஆரோக்கியமான ஓர் உலகை உருவாக்க நாங்கள் விரும்புகிறோம். அதன்படி பூமி மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது,’’ என்றார். ஜீவிதம் அறக்கட்டளை இயக்குனர் இருதய செல்வதாஸ் பேசுகையில், ‘‘இந்த சிறப்புமிக்க நாளில், எஸ்ஆர்எம் குழுமத்தின் இந்த முன்னெடுப்பில் இணைந்து பங்கேற்பதை நாங்கள் பெருமையாகக் கருதுகிறோம். இது சுற்றுச்சூழல் மீதான நமது கூட்டு பொறுப்புணர்வை பிரதிபலிக்கின்றன. இந்த மரக்கன்றுகள் வளரும்போது, அவை மருத்துவர்களின் நலமளிக்கும் சேவைக்கும், நாம் வாழும் நிலைப்புத்தன்மையுள்ள பூமிக்கும் சான்றாக விளங்கும் வாழும் நினைவு சின்னங்களாக திகழும்,’’ என்றார்.
மருத்துவர்கள் தினத்தையொட்டி 500 மரக்கன்றுகள் நன்கொடை: எஸ்ஆர்எம் குளோபல் மருத்துவமனை வழங்கியது
0