திருச்சி, நவ.27: மருத்துவர்களை தாக்கும் மனநிலை சமுதாயத்தில் மாற வேண்டும் என்று மகப்பேறு மற்றும் மகளிர் நல டாக்டர்கள் சங்கம் வலியுறுத்தி உள்ளது. திருச்சி இந்திய மருத்துவ சங்கத்தில் திருச்சி மகப்பேறு மற்றும் மகளிர் நல டாக்டர்கள் சங்க நிர்வாகிகள் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில் இந்திய மருத்துவ சங்க முன்னாள் தேசிய தலைவர் டாக்டர் அஷ்ரப், தேசிய துணைத் தலைவர் குணசேகரன், திருச்சி இந்திய மருத்துவ சங்க தலைவர் சுரேந்திரபாபு, செயலாளர் முகேஷ்மோகன், தமிழ்நாடு மகப்பேறு மற்றும் மகளிர் நல டாக்டர்கள் சங்க தலைவர் ரமணிதேவி, தென்மண்டல துணை தலைவர் சர்மிளா, திருச்சி தலைவர் தமிழ்செல்வி, செயலாளர் உமாவேல்முருகன், பொருளாளர் லாவண்யா ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் டாக்டர்கள் மற்றும் மகப்பேறு டாக்டர்கள் சந்திக்கும் பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
கூட்ட முடிவில் மகப்பேறு மற்றும் மகளிர் நல டாக்டர்கள் சங்கம் மாநில தலைவர் ரமணி தேவி, திருச்சி தலைவர் தமிழ்செல்வி ஆகியோர் கூறியதாவது:- மகப்பேறு கால இறப்பு இந்தியாவில் தமிழகத்தில் குறைவாக இருப்பதற்கு அரசு, டாக்டர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் அனைவரின் கூட்டு முயற்சிதான் காரணம். கலெக்டரின் ஆய்வுக் கூட்டத்தில் மருத்துவர்களுக்கு உரிய மரியாதை தர வேண்டும். இரவு 11 மணி வரை ஆய்வுக் கூட்டம் நடப்பது, மருத்துவமனை உரிமம் ரத்து செய்வதாக கூறி மிரட்டுவது, மருத்துவர்களை கொலைகாரர்கள் போல சித்தரிப்பது, நோயாளி நோய் குறித்த அறிக்கையை கிழித்து எறிதல் போன்ற செயல்பாடுகள் மிகவும் வருத்தம் அளிக்கிறது. இதுகுறித்து அரசிடம் தகவல் தெரிவிக்க இருக்கிறோம்.
இது போன்ற ஆய்வுக் கூட்டத்தில் அரசு, தனியார் மருத்துவமனை சீனியர் டாக்டர்கள் இடம் பெற்ற மருத்துவ நிபுணர்கள் குழு ஆய்வு செய்து தந்த அறிக்கையின் படி ஆய்வுக் கூட்டம் நடத்த வேண்டும். அரசும், நிர்வாகமும் மகப்பேறு மருத்துவர்கள் குறித்து ஊடகங்களில் தகவல் தெரிவிப்பது டாக்டர்களுக்கு எதிரான அணுகுமுறையை உருவாக்கும். மருத்துவமனைகளை எல்-1, எல்-2, எல்-3 என தரம் பிரிப்பது நடைமுறையில் சாத்தியமில்லை. மருத்துவர்களை தாக்கும் மனநிலை சமுதாயத்தில் மாற வேண்டும். வீட்டில் மகப்பேறு அதற்கு ஒரு குழு மற்றும் விழா நடத்தி பரிசு வழங்குவதை கடுமையாக எதிர்க்கிறோம். நோயாளிகள் குணம் பெற வேண்டும் என்ற அடிப்படையில்தான் அனைத்து மருத்துவர்களும் பணியாற்றுகிறோம். என கூறினார்கள்.