திருவாரூர், நவ. 15: மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கக்கோரி திருவாரூர் அரசு மருத்துவகல்லூரி முன்பாக அரசு மருத்துவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை கிண்டியில் மருத்துவர் பாலாஜி கத்தியால் குத்தப்பட்ட சம்பவத்தில் குற்றவாளி விக்னேஷ் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் மருத்துவர் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கான பாதுகாப்பு சட்டத்தினை முழுமையாக அமல்படுத்திட வேண்டும். ஒரு நோயாளிக்கு ஒரு உதவியாளர் மட்டும்தான் என்ற அடிப்படையில்அனுமதி வழங்க வேண்டும், அரசு மருத்துவமனைகள் அனைத்திலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வெளி நோயாளிகள் சிகிச்சை பிரிவினை நேற்று அரசு மருத்துவர்கள் சங்கத்தினர் புறக்கணித்தனர்.
இதேபோன்று தாலுகா மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் என 250க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனர். மேலும் இவர்களுக்கு ஆதரவாக இந்திய மருத்துவ சங்கத்தினரும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரையில் வெளி நோயாளிகள் சிகிச்சையை புறக்கணித்தனர். மேலும் கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி முன்பாக அரசு மருத்துவர்கள் சங்க மாவட்ட தலைவர் லெனின் தலைமையிலும், மாவட்ட செயலாளர் சிவபாலன் முன்னிலையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் இந்திய மருத்துவ கழகம் சார்பில் டாக்டர் கோபாலகிருஷ்ணன் மற்றும் அரசு ஊழியர் சங்கத்தினர் கலந்து கொண்டனர்.