ஸ்ரீ கிருஷ்ண அமுதம் – 19 (பகவத் கீதை உரை)நேரெதிரான இரு நிலைகளையும் ஒரே மாதிரியாகக் கருதுவது அதாவது அந்த இருவகை சூழ்நிலைகளையும் ஒரே மாதிரி எதிர்கொள்வது, ஒரே மாதிரி வினையாற்றுவது எல்லாம் ஒரு ஞானியின் சுபாவம், இயல்பு. இந்த சுபாவமும் பிறவியிலிருந்தே அமைந்து விடாது. தொடர்ந்து பயிற்சி யாலும், சுயம் மறந்த தன்மையாலும் மட்டுமே கைவரக் கூடியது. புத்தியுக்தோ ஜஹாதீஹ உபே ஸுக்ருத துஷ்க்ருதேதஸ்மாத்யோகாய யுஜ்யஸ்வ யோகஹ கர்மஸு கௌசலம் (2:50)‘‘நடுநிலை புத்தியுள்ளவன் அதாவது ஞானி, நன்மை தீமை இரண்டுக்கும் வித்தியாசம் பார்க்க மாட்டான். இரண்டையும் ஒன்றேபோல் பாவிப்பான். அவனுடைய உணர்வுகள் இருநிலையிலும் எந்த பாதிப்பையும் அடையாது. நிர்ச்சலனனாக இருப்பான். அவன் இம்மையில் துறக்கும் மனோநிலை இது. நீயும் நடுநிலை புத்தியுள்ளவனாக விளங்குவாயாக. அதாவது யோகத்தைச் சார்ந்தவனாகிவிடு. இந்த யோகநிலையே உன்னைச் செம்மையாகச் செயல்படவைக்கும்.’’ அர்ஜுனனுக்கு, கிருஷ்ணனுடைய மனோபாவத்தில் சிந்திக்கத் தெரியவில்லை. அல்லது சாதாரண மானுட மனப்போக்கிலிருந்து அவனால் விடுபடமுடியவில்லை. எந்தச் செயலுக்கும் விளைவுகள் இருக்கத்தான் செய்யும்; அதை கிருஷ்ணனும் ஒப்புக்கொள்கிறார். ஆனால், அந்த விளைவுகளை உள்ளபடியே ஏற்றுக்கொள், உணர்வுபூர்வமாக அணுகாதே என்கிறார்.அற்ப மானிடருக்கு அது சாத்தியமா? அப்போதைக்கு அந்த விளைவுகளை எந்த பாதிப்புமில்லாமல் எதிர்கொண்டுவிட்ட பிறகு, பின்னாளில் அதன் தொடர்ச்சி, நம் மனதைப் பின்னுக்கு இழுக்காதா? ஒரு வைராக்கியத்தில் நன்மை-தீமையை ஒரேமாதிரியாகப் பாராட்டினாலும், பிற்காலத்தில் அந்த விளைவுக்கான தாக்கங்கள் ஏற்படுமானால், மனம் அப்போதும் அதே வைராக்கியம் கொண்டிருக்குமா? சுற்றுச் சூழல், உறவினர், நண்பர் என்று எந்த முகாந்திரத்திலிருந்தாவது பழைய விஷயங்களை நினைவூட்டும் சந்தர்ப்பம் வந்தால், அப்போதும் வருந்துவதோ, சந்தோஷப்படுவதோ இல்லாத அதே மனநிலையைத் தொடர்ந்து கைக்கொள்ள முடியுமா?அர்ஜுனன், இன்னும் குழப்பத்திலிருந்து விடுபடுபவனாகத் தெரியவில்லை. இன்றைக்கு அப்பியாசப்படுத்திக்கொள்ளும் சமநிலை மனது தொடர்ந்து நீடிக்குமா என்ற சந்தேகத்துக்கு ஆட்பட்டான் அவன். கிருஷ்ணனோ அந்தப் பயிற்சியின், முதல் பாடமாக இந்த யுத்தகளத்தின் விளைவுகளை அவன் ஏற்றுக்கொள்வதிலிருந்து ஆரம்பிக்கலாம் என்று அறிவுறுத்துகிறார். முதல் வகுப்பில் தேர்ச்சி பெறுபவன் அடுத்தடுத்த வகுப்புகளிலும் அதே தேர்ச்சியைத் தொடர்வான். மேன்மேலும் சிறப்பாக, கூடுதல் ஞானத்தோடு, கூடுதல் மதிப்போடு அவனால் வாழ்க்கை வகுப்புகளை வெற்றிகொள்ள இயலும். அதற்கு அஸ்தி வாரம், முதல் வகுப்புத் தேர்ச்சிதான். இந்தத் தேர்ச்சி தந்த மனப்பக்குவத்தை அவன் வளர்த்துக் கொள்ளும் நேர்த்தியில்தான் அடுத்தடுத்த இலக்குகளையும் அவனால் எட்ட முடியும். அதேபோல் அர்ஜுனனும், இப்போதைய மனப்போராட்டத்தை வெல்வானானால், வாழ்நாள் முழுதும் அவனால் மனதை இன்னும் எளிதாக வெல்ல முடியும்.இந்தப் பற்றற்ற நிலை என்பதற்கு யதார்த்தமான ஒரு விளக்கத்தைப் பார்க்கலாம்.ஒரு நோயாளி மருத்துவரிடம் வருகிறான். தன் உடல்நல பாதிப்பை தனக்குத் தோன்றும் அறிகுறிகள் மூலமாக விளக்குகிறான். மருத்துவரும் சில பரிசோதனைகள் மூலம் அவனுடைய நோய் இன்னது என்று உறுதிப்படுத்துகிறார். அவனுக்கு அறுவை சிகிச்சை செய்யவேண்டியது அவசியம் என்ற முடிவுக்குவருகிறார். நோயாளியும் ஒப்புக்கொள்கிறான். அறுவை சிகிச்சைக்கு நாள் குறித்தாகிவிட்டது. மருத்துவர் முன் நோயாளி கிடத்தப்படுகிறான். மருத்துவர் சிகிச்சையை ஆரம்பிக்கிறார். அவருடைய இப்போதைய ஒரே நோக்கம் அந்த நோயாளிக்கு உரிய சிகிச்சையை அளித்து, அவருடைய உபாதையிலிருந்து அவரை மீட்பதுதான். தன்னாலான அனைத்து முயற்சிகளையும் அவர் மேற்கொள்கிறார்.இத்தனைக்கும் அந்த நோயாளி அவருடைய உறவினரோ அல்லது நண்பரோ இல்லை. யாரோ ஒருவர், முன்பின் அறிமுகமில்லாதவர். அந்தப் பொது மருத்துவமனையில் எந்தக் கட்டணமும் செலுத்த வேண்டிய அவசியமில்லாமல் சிகிச்சை பெற வந்த ஒருவர். அவருக்காக மருத்துவர் ஏன் இத்தனை பாடுபட வேண்டும்? இது அவருடைய கடமை, சேவை. தான் சிகிச்சை அளிக்கும் நபர் யார், எவர் என்று எதையும் பார்க்காமல் மருத்துவம் பார்ப்பதுதான் அவரது வேலை. சிகிச்சை நல்ல முறையில் மேற்கொள்ளப்பட்டு அந்த நோயாளி பிழைக்கக்கூடுமானால் அவர் மருத்துவருக்கு அன்பளிப்பாக ஏதேனும் தொகை வழங்கலாம். நோயாளி பிழைத்ததை அறிந்து சந்தோஷத்துடன், அவனுடைய உறவினர்கள் அவரைச் சூழ்ந்துகொண்டு பாராட்டலாம். ஆனால் அவர் அந்த உறவினர், நண்பர்களுடைய சந்தோஷத்தைத் தானும் பகிர்ந்துகொள்வதில்லை. ‘அடுத்த கேஸ் யார்?’ என்று கேட்டபடி அந்த இடத்தை விட்டு அகன்று விடுகிறார்.அன்பளிப்புத் தொகைக்காகவோ, பாராட்டுதல்களுக்காகவோ அவர் இந்தச் சேவையைப் புரியவில்லை. அந்தப் பலனையும் மீறிய ஒரு அர்ப்பணிப்பு, கடமை உணர்வு அவருக்கு இருக்கிறது. அந்த உந்துதலில்தான் அவர் பணியாற்றுகிறார். ஏனென்றால் அந்த மருத்துவரைப் பொறுத்தவரை அந்த நோயாளி மட்டும்தான் அவரிடம் சிகிச்சை பெறுகிறாரா? இல்லை, இவரைப்போல இன்னும் எத்தனையோ பேர் அவரிடமிருந்து பெற்றிருக்கிறார்கள், பெறுகிறார்கள், பெறப்போகிறார்கள். இந்த நோயாளிகள் எல்லோருமே அவருக்கு ஒன்றேதான்.சரி, இந்த நோயாளி பிழைக்கவில்லை, சிகிச்சை பலனளிக்காமல் இறந்துவிடுகிறார். அப்போது அந்த மருத்துவரின் நிலை என்ன? அப்போதும் அடுத்த நோயாளியின் நோயைப் போக்க அவர் முயற்சி மேற்கொள்ளத் தயாராகிவிடுகிறார். அவரும் நோயாளியின் உறவினர்களைப் போல் அழுவதில்லை, வருந்துவதில்லை, ஏன், தன் சிகிச்சையால் பிழைக்க வைக்க முடியவில்லையே என்ற குற்ற உணர்வுகூடக் கொள்வதில்லை. அவரைப் பொறுத்தவரை அந்த நோயாளியின் ஆயுள் முடிந்து விட்டது, அவ்வளவுதான். அவருடைய உயிரைப் பிடித்துவைக்க, அவருடைய நோயை குணப்படுத்த மருத்துவர் மேற்கொண்ட ஆத்மாத்மான முயற்சிகள் எதுவும் பலனளிக்கவில்லை, அவ்வளவுதான். அறிமுகமில்லாத நோயாளி என்றில்லை, தனக்கு நன்கு தெரிந்த தம் உறவினர், நண்பரானாலும்கூட இதே மனநிலையில் இருக்கவேண்டியவர்தான் மருத்துவர். சில மருத்துவமனைகளில் ‘நான் சிகிச்சையளிக்கிறேன், கடவுள் காப்பாற்று கிறார்’ என்று எழுதி வைத்திருப்பார்கள்.அதாவது, எதுவுமே மனித முயற்சியால் அல்ல. ஆட்டுவிப்பவனின் கயிற்றில் தொங்கியபடி அவன் விரல் அசைவுகளில் ஆடுபவன்தான் மனிதன். மொத்தத்தில் ஒரு மருத்துவருக்கு ஒரு நோயாளியைப் பிழைக்க வைக்கக் கூடாது என்ற எண்ணமோ அல்லது தன்னால் வெகு எளிதாகப் பிழைக்கவைக்க முடியும் என்ற அகங்காரமோ இல்லாதிருக்க வேண்டும். எல்லாம் ஈசன் செயல் என்ற உள்ளார்ந்த ஈடுபாட்டோடு கடமையைச் செய்தால் நோயாளியின் இறப்பு, பிழைப்புக்கெல்லாம் அவர் சலனப்படவேண்டியதே இல்லை.அப்படி சலனப்பட்டால், அவருடைய திறமையில் குறைபாடு தோன்றும். அதற்கு அவர் இடம் கொடுக்கலாகாது. தான் மனதைக் கட்டுப்படுத்திவிட்டதாக சொல்லிக்கொள்ளும் ஒரு யோகிக்கு ஒரு சோதனை வந்தது. தன்னுடைய ஆசிரமத்துக்கு தினமும் காலையில் பால் கொண்டுவந்து கொடுக்கும் பால்காரி ஒருநாள் வரவில்லை. மறுநாள் வந்தபோது, முந்தினநாள் தான் கடந்து வரவேண்டிய ஆற்றுப் பாதையில் வெள்ளம் புரண்டதால், தன்னால் வர இயலவில்லை என்று காரணம் சொன்னாள். யோகி அவளிடம் ஒரு மந்திரத்தை உபதேசித்து அதை மனமாரச் சொன்னால், எத்தகைய வெள்ளத்தையும் கடந்து வந்துவிடலாம் என்று அறிவுறுத்தினார். அதன் பிறகு அவள் நேரம் தப்பாமல் வந்து பால் ஊற்றிச் சென்றாள்.ஆனால், அந்த நாட்கள் சிலவற்றில் ஆற்றில் வெள்ளம் புரண்டோடியதை அந்த யோகி அறிந்திருந்தார். அவளால் எப்படி ஆற்றைக் கடந்து வரமுடிந்தது என்பதை அவர் கேட்க, அவள், அவர் சொல்லிக்கொடுத்த மந்திரத்தை உச்சரித்து ஆற்று நீரின் மீதே நடந்து வந்ததாகச் சொன்னாள். அதைக்கேட்டு வியந்துபோன அவர், தானும் அவ்வாறு ஆற்றைக் கடக்க முயற்சிப்பதாகக் கூறி ஆற்றங்கரைக்கு வந்தார். எதிர்பார்த்தபடியே கடந்து செல்ல முடியாதபடி ஆற்றின் நீரோட்டம் வேகமாக இருந்தது. அந்தப் பெண்ணோ மந்திரத்தை உச்சரித்தபடி நீரின் மேல் எளிதாக நடந்தாள். பின்னால் திரும்பிப் பார்த்தால், யோகி நீரில் தன் வேட்டி நனைந்துவிடாதிருக்க அதைத் தூக்கிப் பிடித்தபடி நடக்க முயற்சித்துக்கொண்டிருந்தார். பிறகு அடுத்த அடி எடுத்து வைக்க, ஆற்று நீர் அவரை அடித்துக்கொண்டு போய்விட்டது. தான் உபதேசித்த மந்திரம்தானே என்று அதனை வெகு அலட்சியமாக உச்சரித்தபடி ஆற்றைக் கடந்த அவருடைய அகம்பாவத்துக்கு, அதைவிட தன் ஆடை நனைந்துவிடக் கூடாதே என்ற சுயநலத்துக்கு, சாட்டையடி கிடைத்தது. ஆனால் அந்த மந்திரம் புரிகிறதோ, இல்லையோ ஒரு நம்பிக்கையில் பின்விளைவுகளைப் பற்றிக் கொஞ்சமும் யோசிக்காத அந்தப் பெண்ணால் ஆற்றை சுலபமாகக் கடக்க முடிந்தது!கர்மஜம் புத்தியுக்தாஹி பலம் த்யக்த்வா மனீஷிணஜன்மபந்தவினிர்முக்தாஹா பதம் கச்சந்த்யனாமயம் (2:51)‘‘நடுநிலையில் நிற்கும் சான்றோர்கள் அதாவது எந்த பந்தத்துக்கும் ஆட்படாத ஞானிகள், வினைப்பயனை எதிர்நோக்குவதில்லை. அவற்றை அவர்களால் சுலபமாக விட்டொழிக்க முடியும். இப்படிப்பட்டவர்கள் எந்தக் கேடும் அடைய முடியாதபடி பெருவாழ்வு வாழ்கிறார்கள்; மிக உயரிய நிலையை அடைகிறார்கள்.’’ வாழ்க்கை முறையை அறிந்த ஒரு விவேகியால் எந்த உணர்வையும் ஒன்றுபோல் பாவிக்கமுடியும். பிறரைப் போலவே அந்த ஞானியைச் சுற்றிலும் இருவகை நிலைகள் உருவாகத்தான் செய்கின்றன. நன்மையும், தீமையும் மாறிமாறி அவருக்கும் ஏற்படத்தான் செய்கின்றன. நெருங்கியவர்களின் மகோன்னத வாழ்வையும், அவர்களுடைய இறப்பையும் அவரும் காணத்தான் செய்கிறார். ஆனால், எந்த நிலையிலும் அவர் மனதில் சஞ்சலத்தை உருவாக்கிக் கொள்வதில்லை. ஏனென்றால் சமநிலை மனதுடைய அவரால், துன்பத்தையும் இன்பமாக்கிக் கொள்ள முடியும்; தாழ்நிலையிலும், உயர்நிலை வாழ்வை அவரால் வாழ முடியும். அப்படித் தன்னை சமன் செய்துகொள்ளும் ஆற்றல் படைத்தவர் அவர்.இத்தகைய மனநிலைக்குத் தன்னை உயர்த்திக்கொள்ள அர்ஜுனன் முயற்சிக்க வேண்டும். அப்போதுதான் தர்மம் ஜெயிப்பதற்கு அவன் தன் பங்களிப்பை நல்கமுடியும். நன்மையோ, தீமையோ, அதெல்லாம் நம் செயலுக்குப் பின்னால் விளைவது. அதை இப்போதே எதிர்பார்ப்பானேன்? இன்னும் நடக்காத ஒரு விஷயத்தை இப்போதே கற்பனையில் ஏன் உருவாக்கிப் பார்க்க வேண்டும்? பொதுவாகவே கற்பனையில் காண்பதைவிட யதார்த்தம் என்பது வித்தியாசமானதாகத் தான் இருக்கும். அப்படியிருக்க கற்பனை சந்தோஷம், கற்பனை துக்கம் என்று ஏன் மனதை இப்போதே சலனப்படுத்திக்கொள்ள வேண்டும்? கற்பனையாய் எதிர்பார்ப்பதற்கு மாறாக, பின்விளைவு அமையுமானால் அதைத் தாங்கிக்கொள்ள முடியுமா? வெறும் ஊகத்தில் வெற்றியையோ, தோல்வியையோ இப்போதே நிர்ணயித்துக்கொள்ளத்தான் வேண்டுமா, என்ன? ஆகவே, எடுத்துக்கொண்ட நோக்கத்துக்குக் குந்தகம் ஏற்பட்டுவிடாதபடி, அதற்கான முயற்சிகளில் முழு மனதுடன் ஈடுபடவேண்டியது அர்ஜுனனின் இப்போதைய தலையாய பொறுப்பாகிறது. சமுதாயத்துக்கு நல்லது உண்டாகவேண்டும் என்று பாடுபடுபவர் தன்னுடைய அந்த நோக்கத்திற்கு எந்த இடையூறு வந்தாலும், எத்தனை தாக்குதல்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தாலும் அல்லது எத்தனை பாராட்டுப் பூக்கள் தம்மீது பொழிந்தாலும், எத்தனை பேர் தன்னுடன் கைகோத்து அணிவகுத்தாலும், அவர் இதனாலெல்லாம் மனதை ஊசலாட விடமாட்டார். சமுதாய நன்மை என்ற தன் ஒரே நோக்கம் நிறைவேறவேண்டும் என்ற ஒரே குறிக்கோள்தான் அவருக்கு. இதைத்தான் பரமேஸ்வரன் செய்தார். பாற்கடலைக் கடைந்தபோது மதிப்புவாய்ந்த பொக்கிஷங்கள் பல வெளிவந்தாலும், உலக க்ஷேமத்தைக் கருதி, ஆலகால விஷத்தைத் தான் உட்கொண்டார். பார்வதி தேவி முதலான மற்றவர்கள்தான் அதைப் பார்த்துப் பதறிப்போனார்களே தவிர, ஈசன் மந்தஹாச வதனத்துடன், விஷபாதிப்பு ஏதுமின்றி காட்சிதந்தார். அவருடைய உயரிய நோக்கம், அமிர்தத்தால் உலகம் உய்ய வேண்டும் என்பதே. அதற்குத் தடையாக அந்த அமிர்தத்தையும் அழித்து, நஞ்சாக்கிவிடக்கூடிய ஆலகால விஷம் வாசுகிப் பாம்பிடமிருந்து வெளிப்பட்டபோது, அமிர்தத்தையும் அதனால் இந்தப் பிரபஞ்சத்தையும் காக்க முனைந்த மகாதேவன், பளிச்சென்று அந்த விஷத்தை எடுத்து உட்கொண்டுவிட்டார். தனக்கு என்ன நேரக்கூடும் என்ற பின்விளைவை அவர் சிந்திக்கவில்லை. காரணம், பாற்கடலைக் கடைந்து அமிர்தத்தை அடைவதாகிய அந்த நோக்கம் பரிபூரணமாக நிறைவேறவேண்டும் என்பதுதான். இப்படி அடுத்து நேரக்கூடியது என்னவாக இருக்கும் என்ற கற்பனை எதிர்பார்த்தலில் காலத்தை ஓட்டினால், அன்றாடக் கடமையைக்கூட சரிவர நம்மால் செய்ய இயலாமல் போய்விடும். ஒரு செயலை எடுத்துக்கொண்டோம், அதை முழுமையாக, சிறப்பாகச் செய்து முடிப்போம், பலன்கள் தாமாக நம்மை வந்து அடையும். அந்தப் பலன்களின் மதிப்பையோ, அளவையோ அல்லது அவமானத்தையோ அதன் உக்கிரத்தையோ நாம் கற்பனையாக எதிர்பார்க்காமல் செயலாற்று வோம் என்றுதான் கிருஷ்ணன் திரும்பத் திரும்ப வலியுறுத்துகிறார்.(கீதை இசைக்கும்)பிரபு சங்கர்…