பூந்தமல்லி, ஆக. 12: ஈஞ்சம்பாக்கம், விஜிபி லேஅவுட், 3வது நிழற்சாலையை சேர்ந்தவர் பழனியப்பன். மருத்துவரான இவர், கோடம்பாக்கத்தில் மருத்துவமனை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு இவரது வீட்டில் மின்தடை ஏற்பட்டது. இதுகுறித்து மின்வாரியத்தில் புகார் தெரிவித்தார். அதன்பேரில், மின் வாரிய ஊழியர்கள் அங்கு வந்து சோதனை செய்தனர். அதில், மின் வயரில் பழுது இருப்பதால், நாளை காலை வந்து சரி செய்கிறோம் என கூறிவிட்டுச் சென்றனர்.
இந்நிலையில் நேற்று அதிகாலை வீட்டின் முன்புறம் இருந்த மின் இணைப்பு பெட்டி பயங்கர சத்தத்துடன் வெடித்து தீப்பிடித்தது. இதில் அருகில் நிறுத்தப்பட்டிருந்த 2 கார்கள் தீப்பிடித்து எரிந்தன. இதனையடுத்து வீட்டில் இருந்தவர்கள் அங்கிருந்து வெளியேறினர். தீ விபத்து தொடர்பாக தீயணைப்பு துறை மற்றும் மின்வாரியத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில், மின்வாரிய ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அந்த பகுதியில் தற்காலிகமாக மின் இணைப்பை துண்டித்தனர். திருவான்மியூர் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். ஆனால், அதற்குள் 2 கார் மற்றும் வீட்டின் முன் பகுதி சேதமடைந்தது. இதுகுறித்து நீலாங்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.