நன்றி குங்குமம் டாக்டர்விழிப்புணர்வுமருத்துவக் கழிவுகளை உரிய முறையில் அப்புறப்படுத்துதல் மிகவும் அவசியமானது. இல்லாவிட்டால் அதன் மூலம் கடுமையான நோய்த்தொற்றுகள் பரவும் அபாயம் உள்ளது. அரசாங்கம் இதற்கென பல்வேறு விதிமுறைகளை வகுத்து வைத்திருந்தாலும் அவை சரியாக பின்பற்றப்படுவதில்லை என்று அவ்வப்போது சர்ச்சைகள் எழுந்துவருகின்றன.குறிப்பாக, தலைநகரான சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள சுகாதார நிறுவனங்கள் குறித்து அதிகம் புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் மருத்துவக் கழிவுகளை முறையாக கையாளாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது.உயிரியல் மருத்துவக் கழிவு மேலாண்மை விதிகள் 2016 -ன்படி அனைத்து சுகாதார வசதி மருத்துவமனைகள், கால்நடை மருத்துவமனைகள், ரத்த வங்கிகள், ஆய்வகங்கள், தடுப்பூசி மையங்கள், ரத்த வங்கி முகாம்கள், பள்ளிகளில் உள்ள முதலுதவி மையங்கள், ரத்த பரிசோதனை மையங்கள், நோயியல் ஆய்வகங்கள் மற்றும் ஆயுஷ் மருத்துவமனைகள் அனைத்தும் இந்த விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளபடி மருத்துவ திடக் கழிவுகளை முறையாகக் கையாண்டு, மாசு கட்டுப்பாடு வாரியத்தின் அனுமதி பெற்று அப்புறப்படுத்த வேண்டும்.மருத்துவமனைகளில் இருந்து வெளியேற்றப்படும் மருத்துவ திரவக் கழிவுகளை அந்தந்த வளாகத்திலேயே முறையாக சுத்திகரிப்பு செய்து வெளியேற்ற வேண்டும். முடியாதபட்சத்தில் சென்னை புறநகர் பகுதிகளில் 2 பொது மருத்துவ திடக்கழிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு அனுப்பி அக்கழிவுகளை முறையாக அப்புறப்படுத்த வேண்டும். ஆனால், தற்போது சென்னை புறநகர் பகுதிகளில் அடிக்கடி மருத்துவ திடக்கழிவுகள் மற்றும் காலாவதியான மாத்திரைகள், மருந்துகள் குப்பைக் கழிவுகளுடன் சேர்த்து கொட்டப்படுவதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.‘இனி வரும் காலங்களில் இதுபோல் நிகழ்வுகள் நடக்காதபடி சென்னை மற்றும் புறநகர் பகுதியில் உள்ள மேற்குறிப்பிட்ட நிறுவனங்கள், மருத்துவ திடக்கழிவுகளை முறையாக சேகரித்து, பிரித்து இந்த 2 பொது மருத்துவ திடக்கழிவு மையங்களுக்கு மட்டுமே அனுப்ப வேண்டும். இல்லாவிட்டால் அந்த நிறுவனங்களின் மீது மூடுதல் மற்றும் மின் இணைப்பு துண்டித்தல் ஆகிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.மேலும் மருத்துவமனைகள் மற்றும் பொது மருத்துவ திடக்கழிவு மையங்களில் இருந்து மருத்துவ திடக்கழிவுகளை நிலத்திலோ அல்லது நீர்நிலைகளிலோ கொட்டினால், அவர்களிடம் இருந்து சுற்றுச்சூழல் இழப்பீடுத் தொகை பெறப்படும்’ என்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் பொன்னையா எச்சரிக்கை செய்துள்ளார்.– க.கதிரவன்