தொண்டாமுத்தூர், ஜூன் 18: கோவை அருகே மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் செவ்வாய்க்கிழமை, விசேஷ நாட்கள், அரசு விடுமுறை நாட்களில் அடிவாரத்தில் இருந்து மலைக்கோயிலுக்கு செல்ல கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் அனுமதி இல்லை என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்நிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை மழை பெய்து கொண்டிருந்த போதும் பக்தர்கள் தேவஸ்தான பஸ்ஸில் ஏறி சாமியை தரிசனம் செய்து வந்தனர்.கார்கள், இரு சக்கர வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. அப்போது ஒரு சில கார்களுக்கு மட்டும் மலைக்குமேல் செல்ல அனுமதி அளிக்கப்பட்டதாக தெரிகிறது. இதனால் கார் மற்றும் இருசக்கர வாகனத்தில் வந்த பக்தர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
அங்கு வந்த கோவில் அறங்காவலர் பிரேம்குமார், பக்தர்கள் இடையே பேச்சுவார்த்தை நடத்தி முதியோர்கள், கர்ப்பிணிகள், வெளி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் நலன் கருதி கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் அனுமதிக்கப்பட்டது. இதனால் அடிவாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து பக்தர்கள் கூறும்போது, வாழ்க்கை பிரச்னைகளை தீர்க்க, கோவிலுக்கு வரும் பக்தர்களை விரோதிகள் போல கோவில் ஊழியர்கள் விரட்டுகின்றனர். பக்குவம் இல்லாத ஊழியர்களுக்கு பக்தர்களிடம் எப்படி நடந்தகொள்ள வேண்டும் என்று உரிய ஆலோசனை வழங்கி பணியில் அமர்த்த வேண்டும் என்றனர்.