திருவாடானை, ஜூன் 4: கேரளாவில் மீன்களை இறக்கி விட்டு நாகப்பட்டிணம் நோக்கி சரக்கு வேன் சென்றது. நேற்று அதிகாலை திருவாடானை அருகே தொண்டி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கல்லூர் பகுதியில் சென்றது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோர வேப்ப மரத்தில் மோதியது. இந்த விபத்தில் சரக்கு வாகனத்தின் முன்பக்கம் பலத்த சேதம் அடைந்தது. டிரைவரான நாகப்பட்டிணம் மாவட்டம், காடம்பாடி பகுதியைச் சேர்ந்த ஜெயபால் மகன் சிவானந்தம்(45) பலத்த காயம் அடைந்தார்.
சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு வீரர்கள், உயிருக்கு போராடிய டிரைவர் சிவானந்தத்தை மீட்டு திருவாடானை தாலுகா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ராமநாதபுரம் மாவட்ட தலைமை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து திருவாடானை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.