Friday, September 13, 2024
Home » மரச்செக்கு எண்ணை தயாரிக்கலாம்!

மரச்செக்கு எண்ணை தயாரிக்கலாம்!

by kannappan
Published: Last Updated on

நன்றி குங்குமம் தோழிமாதம் ரூ.25 ஆயிரம் வருமானம் ஈட்டலாம்…நம் வீடுகளில் சமையலுக்கு பயன்படும் பிரதான பொருட்களில் எண்ணெய்க்கு அதிக முக்கியத்துவம் உண்டு. வறுக்க, பொரிக்க, தாளிக்க என விதவிதமாக எண்ணெய் வகைகளை பயன்படுத்தும் மக்கள் விளம்பரங்களைப் பார்த்து எண்ணெய் வகைகளை தேர்வு செய்கிறார்கள். இவை ரீஃபைண்ட் என்று சொல்லப்படும் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் வகைகள் ஆகும். கடந்த 50 ஆண்டுகளாக இந்த எண்ணைகளால் நாம் பலவிதமான நோய்களால் பாதிக்கப்பட்டு வருகிறோம். சுத்திகரிக்கப்பட்ட எண்ணெயால் ஏற்படும் பாதிப்புகளை உணர்ந்த மக்கள் கல் செக்கு, மரச்செக்குகளால் ஆட்டப்படும் எண்ணெய் வகைகளை அதிக ஆர்வத்துடன் வாங்கி பயன்படுத்த தொடங்கியுள்ளனர். இந்தச் சூழலில் மரச்செக்கு எண்ணெய் தொழில் பெண்களுக்கு ஏற்றத் தொழில், அதனை வீட்டில் ஒரு அறையை தேர்ந்தெடுத்துக்கூட செய்யலாம் என்கிறார் சென்னை அடுத்த பூந்தமல்லியில் ஸ்ரீ ரமணா ஃபுட்ஸ் என்ற பெயரில் கடலை எண்ணெய், நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் தயாரித்து விற்பனை செய்துவரும் கங்காதரன்.‘‘சிறிய அளவில் தொழிலை செய்யும்போது பொருட்களையும் இடத்தையும் சுத்தமாக வைத்துக்கொள்ள முடியும். மக்களுடன் நேரடியாக தொடர்பு வைத்திருப்பதால் அவர்களது குறைகளை கேட்டறிந்து அதற்கேற்றார்போல செய்து கொடுக்கலாம். நமது பொருளின் தரத்தையும் தெரியபடுத்தலாம், இதனால் மக்களுக்கும் நமக்குமான தொடர்பு எப்போதும் தொடர்ந்துக் கொண்டே இருக்கும். எந்த ஒரு தொழிலாக இருந்தாலும் வெளிப்படையாக இருக்க வேண்டும். மக்கள் சந்தேகங்கள் கேட்டால் அவர்களுக்காக நேரம் ஒதுக்கி தெளிவு படுத்தவேண்டும். நீங்கள் தொழில் துவங்க இருக்கும் இடத்தில் இருந்து ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் வேறு யாரும் மரச்செக்கு வைத்துள்ளார்களா? என்று பார்க்க வேண்டும். அவர்களைப் பாதிக்காத வண்ணம் உங்களது உற்பத்தி அளவு அறிந்து அதற்கான மக்கள் வசிக்கும் ஒரு குறிப்பிட்ட எல்லையை தேர்வு செய்யுங்கள். மின்சார வசதி நீங்கள் ெதாழில் ஆரம்பிக்கும் இடத்தில் எவ்வாறு உள்ளது என்று முன்பே தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். காரணம் எண்ணை செக்கினை இயக்க 3 எச்.பி.(HP) மோட்டார் வேண்டும். ஒரு செக்கிற்கு 10க்கு 15 அடி இடமாவது அவசியம் தேவை. தேங்காய், எள்ளு போன்றவற்றை காயவைக்க வெயில் அவசியம். அதனால் 15க்கு 15 அடி சுட்டென தெரிக்கும் வெயிலின் தாக்கம் இருப்பது அவசியம். இயந்திரத்தின் விலை சுமார் 2 லட்சம் முதல் 3 லட்சம் வரை ஆகும். சரக்கு மற்றும் சேவை வரியைச் சேர்த்தும், சேர்க்காமலும், இயந்திர உற்பத்தியாளரைப் பொறுத்து இயந்திரத்தின் விலை மாறுபடும். நல்லெண்ணெய்க்கும், கடலை எண்ணெய்க்கும் 1 லி எண்ணெய் எடுக்க சுமார் 2 3/4 கிலோ முதல் 3 கிலோ பொருட்கள் அவசியம் தேவை. பொருளின் தரத்திற்கேற்ப இந்த அளவுகளும் மாறுபடும். ஒரு நாளைக்கு சுமார் 80 கிலோ கடலை போட்டு ஆட்டினால் சுமார் 30 கிலோ எண்ணெய் மற்றும் 50 கிலோ புண்ணாக்கு கிடைக்கும்.நாம் கலப்படமின்றி, தரமான மூலப்பொருளை போட்டு எண்ணெய் உற்பத்தி செய்யும்போது எண்ணெய்களின் விலை சந்தையில் விற்கும் எண்ணெய்களின் விலையைவிட இருமடங்கும், அதற்கு மேலும் இருக்கும். உதாரணமாக 1 லிட்டர் கடலை எண்ணெய் சந்தையில் 80 ரூபாய்க்கு விற்கபடுகிறது என்றால், நாம் 250 ரூபாய்க்கு விற்க வேண்டியிருக்கும். 80 ரூபாய்க்கு வாங்கிக்கொண்டிருக்கும் மக்களை 250 ரூபாய்க்கு வாங்க வைக்க வேண்டும். இதன் மூலம் தோராயமாக ஒரு மாதத்திற்கு 25 ஆயிரம் ரூபாயிலிருந்து 30 ஆயிரம் ரூபாய் வரை வருமானம் ஈட்டலாம். உதாரணமாக, உரலும் உலக்கையும் மரத்தால் ஆனதால் அதிகமாக எண்ணெயை விதைகளில் இருந்து பிரிக்க முடியாது. 100-க்கு 80 சதவிகிதம் எண்ணெய்யைத்தான் பிழிந்து எடுக்க முடியும். மீதமுள்ள 20 சதவிகிதம் எண்ணெய் சத்துக்கள் புண்ணாக்கில்தான் இருக்கும். நியாயமாகப் பார்த்தால் இதுதான் சரியானது. ஏனெனில், நமக்கு 80 சதவிகிதமும் இதைச் சாப்பிடும் மாட்டுக்கு 20 சதவிகிதமும் சத்துக்கள் கிடைக்கும். இந்தப் புண்ணாக்கைச் சாப்பிடும் மாடுகள் ஆரோக்கியமாக இருக்கும் அதில் இருந்து கரக்கப்படும் பாலும் ஆரோக்கியமாக இருக்கும். இயற்கை முறையில் தயாரிக்கப்படும் எண்ணையை உட்கொள்வதன் மூலம் நாம்முடைய உடல் நலமும் ஆரோக்கியமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இரும்பு இயந்திரங்களில் ஆட்டும்போது அழுத்தம் காரணமாக, எண்ணெயும் புண்ணாக்கும் அதிகளவில் சூடேறி புண்ணாக்கு சக்கையாகிவிடும். மரசெக்கு புண்ணாக்கு மாட்டுக்கு வைக்க வேண்டுமானால் சுமார் 12 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். இயந்திரத்தில் ஆட்டிய புண்ணாக்கை ஒரு மணி நேரம் ஊர வைத்தால் போதும். தொழில் ஆரம்பிக்கும் முன் நீங்க தொழில் துவங்க இருக்கும் இடத்தில் வசிக்கும் மக்களை நேரில் சென்று அவர்களுக்கு இது குறித்த விழிப்பணர்வு ஏற்படுத்த வேண்டும். ஆதரவு தருபவர்களின் புள்ளிவிவரம் எடுக்க வேண்டும். இந்த விவரங்களை கொண்டு, ஒரு மாதத்திற்கு நல்லெண்ணெய், கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய் மூன்றும் மொத்தம் சுமார் 600 லிட்டருக்கு மேல் விற்றால் மட்டுமே நீங்கள் ஒரு செக்கு போட முடியும். இதற்கு ஒரு மாதமோ… ஆறுமாதமோ… ஒரு வருடம் கூட ஆகலாம். அது உங்களின் மார்க்கெட்டிங் திறனை பொருத்தது. இயந்திரம் வந்து இறங்கிய நாளிலிருந்து எண்ணெய் ஆட்டும் தொழிலில் முழுமையாக ஈடுபட்டுவிட வேண்டும். தரமான எள், கடலை, தேங்காய் கிடைக்கும் இடத்தை தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்’’ என்ற கங்காதரன் தொழில் துவங்க ஆர்வமுள்ளவர்களுக்கு ஆலோசனையும் வழங்கி வருகிறார்.-தோ.திருத்துவராஜ்

You may also like

Leave a Comment

eleven + six =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi