செய்யூர்: செய்யூர் அருகே மரத்தின் கிளையை வெட்டும்போது மின்சாரம் பாய்ந்து மரம் ஏறும் கூலித்தொழிலாளி பரிதாபமாக பலியானார். செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் அடுத்த ஓதியூர் பகுதியை சேர்ந்தவர் சேகர் (57). மரம் ஏறும் கூலித்தொழிலாளி. இவர், நேற்று காலை அதே பகுதியில் வசிக்கும் தனது உறவினர் மணி என்பவருக்கு சொந்த தென்னை மரத்தின் கிளைகளை வெட்டுவதற்காக மரத்தில் ஏறினார். அங்கு, கிளைகளை வெட்டிக்கொண்டிருந்தபோது அதில் ஒரு கிளை அவ்வழியாக இருந்த மின்கம்பம் மின்வயர் மீது விழுந்த நிலையில், சேகர் மீது மின்சாரம் பாய்ந்தது.
இதில், அவர் மரத்தில் தொங்கியவாறு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். உடனடியாக அங்கிருந்தவர்கள், அப்பகுதி மின் விநியோகத்தை துண்டித்து, மரத்தில் சடலமாக இருந்தவரை மீட்டனர். தகவலறிந்து வந்த செய்யூர் போலீசார், இறந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின்சாரம் பாய்ந்து கூலித்தொழிலாளி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.