மரக்காணம், ஜூன் 7: மரக்காணம் அருகே மூதாட்டியிடம் தங்க நகையை பறித்து விட்டு பைக்கில் தப்பிச் சென்ற 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே ஆலத்தூர் கிராமத்தில் உள்ள மாயன் தெருவில் வசிப்பவர் கஸ்தூரி (76). இவர் கடந்த 29ம் தேதி வீட்டின் எதிரில் உள்ள பாபா கோயில் அருகில் இருந்துள்ளார். அப்போது பட்டப் பகலிலேயே ஒரே மோட்டார் பைக்கில் வந்த 3 அடையாளம் தெரியாத நபர்கள் மூதாட்டியின் கழுத்தில் இருந்த தங்கை செயினை பறித்துக் கொண்டு மோட்டார் பைக்கில் சூனாம்பேடு வழியாக தப்பி ஓடினர்.
இச்சம்பவம் குறித்து மூதாட்டியின் மகன் செல்வம் (44) மரக்காணம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார் மரக்காணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மூதாட்டியின் கழுத்தில் இருந்த செயினை பறித்து சென்ற நபர்களை கண்டுபிடிக்க மரக்காணம் தேனாம்பேடு சாலையில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து மேற்கொண்டு ரகசிய விசாரணை நடத்தினர். இதில் செய்யூர் வட்டம் சூனாம்பேடு அருகில் உள்ள இல்லோடு கிராமம் அம்பேத்கர் நகரை சேர்ந்த தமிழ் செல்வம் (21), தமிழ்இனியன் (18) மற்றும் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி கீழாண்ட தெருவை சேர்ந்த தில்லி (29) ஆகியோர் மூதாட்டியிடம் நகை பறித்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து தனிப்படை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தலைமறைவாக இருந்த 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தினர்.