மரக்காணம், டிச. 2: வங்க கடலில் உருவான பெஞ்சல் புயல் காரணமாக விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் அதிக கனமழை பெய்தது. நேற்றுமுன்தினம் காலை முதல் இடைவிடாமல் இரவு முழுவதும் பலத்த சூறைக்காற்றுடன் கனமழை கொட்டியது. இதனால் மரக்காணம் அருகே கந்தாடு ஊராட்சிக்கு உட்பட்ட பழைய தெரு அருகில் திண்டிவனம் சாலையோரம் உள்ள பெரிய ஏரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஏரியின் கரை உடைந்து, அருகில் இருந்த பழைய தெரு, புதுத்தெரு உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளில் வெள்ளநீர் புகுந்தது.
நள்ளிரவில் வெள்ளம் புகுந்ததை சற்றும் எதிர்பாராத அப்பகுதியினர் வீட்டிலிருந்து வெளியேறி பாதுகாப்பான இடத்திற்கு சென்றனர். ஏரிக்கரை உடைந்ததால் தண்ணீர் முழுவதும் வெளியேறியது. தற்போது ஏரி குட்டைபோல் காணப்படுகிறது. கடந்தாண்டு பெய்த கனமழையின் போது ஏரியில் இதே இடத்தில்தான் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறியது.
இதனால் உடைந்த கரைப்பகுதி ரூ.4 லட்சம் மதிப்பில் கடந்த 3 மாதத்துக்கு முன்பு புதிதாக கட்டப்பட்டது. இந்நிலையில் நேற்றுமுன்தினம் பெய்த ஒரு நாள் மழையிலேயே புதிதாக கட்டப்பட்ட கரை மீண்டும் உடைந்ததாக அப்பகுதி பொதுமக்கள் வேதனையுடன் கூறினர். ஏரிக்கரை உடையாமல் இருக்க ஏரியின் மதகு பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக அகற்ற வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.