மரக்காணம், ஜூன் 25: மரக்காணம் அருகே ஒரே வீட்டில் மாணவி மற்றும் அவரது அத்தை ஆகியோர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே பனிச்சமேடு மீனவர் கிராமத்தை சேர்ந்தவர் விஜய் (25) மீனவர். இவரது மனைவி ஸ்ரீமதி (23). இவர்களுக்கு திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் இவர்களுக்கு குழந்தை இல்லை.
செங்கல்பட்டு மாவட்டம் பரமன்கேணி மீனவர் கிராமத்தில் வசிக்கும் விஜய்யின் அக்கா மகள் கீர்த்திகா (15). இவர் தனது தாய்மாமனான விஜய் வீட்டில் தங்கி பனிச்சமேடு அருகில் உள்ள அனுமந்தை ஊராட்சி ஒன்றிய மேல்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு விஜய், அவரது மனைவி ஸ்ரீமதி, அக்கா மகள் கீர்த்திகா ஆகிய 3 பேரும் ஒன்றாக அமர்ந்து உணவு சாப்பிட்டுள்ளனர். இதனை தொடர்ந்து கீர்த்திகா மேல் மாடியில் படுத்து தூங்க சென்றுள்ளார்.
வழக்கம்போல் விஜய் நேற்று அதிகாலை மீன்பிடிக்க கடலுக்கு சென்று விட்டார். ஆனால் நீண்ட நேரமாகியும் மாடியை விட்டு கீர்த்திகா வெளியில் வராததால் விஜய்யின் மனைவி ஸ்ரீமதி மேல் மாடிக்கு சென்று பார்த்துள்ளார். அப்போது கீர்த்திகா அங்கிருந்த மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு பிணமாக தொங்கியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த ஸ்ரீமதி என்ன காரணத்தினாலோ அவரும் கீழ் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த இருவரும் வீட்டை விட்டு வெளியில் வராததால் சந்தேகமடைந்த அவரது உறவினர்கள் வீட்டின் உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது கீழ் வீட்டில் ஸ்ரீமதியும், மேல் மாடி வீட்டில் கீர்த்திகாவும் தூக்கிட்டு இறந்த நிலையில் இருந்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் மரக்காணம் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று 2 உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கனகசெட்டிக்குளத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இவர்களது உறவினர் கொடுத்த புகாரின் பேரில் மரக்காணம் போலீசார் வழக்குப்பதிந்து 2 பேரும் ஒரே வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதற்கு குடும்ப பிரச்னை காரணமா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்ற கோணத்தில் முதல் கட்ட விசாரணையை துவங்கியுள்ளனர். ஒரே குடும்பத்தில் 2 பேர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.