வருசநாடு, நவ.14: ஆண்டிபட்டி நெடுஞ்சாலைத்துறை உட்கோட்டத்தில் மயிலாடும்பாறை அருகே சாலையை இரு வழித்தடமாக அகலப்படுத்தும் பணியை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். தமிழ்நாட்டில் மாநில நெடுஞ்சாலைகள், மாவட்டத்தின் முக்கிய சாலைகள், மாவட்டத்தின் இதர சாலைகள் ஆகிய சாலைகளில் உள்ள போக்குவரத்து தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் சாலை கட்டமைப்பு பணிகள் தமிழக அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி தேனி மாவட்டத்தில் உள்ள நெடுஞ்சாலைத்துறை கோட்டத்தைச் சார்ந்த ஆண்டிப்பட்டி நெடுஞ்சாலைத்துறை உட்கோட்டத்தில் ஒருங்கிணைந்த சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதில் மயிலாடும்பாறை முதல் தங்கம்மாள்புரம் வரை உள்ள சாலையில், தற்போது இடை வழி தடமாக இருந்து வந்தது. இதனை ஆண்டிபட்டி நெடுஞ்சாலைத்துறை மூலம் இரு வழி தடமாக மாற்றும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகள் சுமார் ரூ.1.80 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது. இந்த பணியின் போது தேனி மாவட்ட நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் சுவாமிநாதன் மேற்பார்வையில், உதவி கோட்ட பொறியாளர் திருக்குமரன் உதவி பொறியாளர் முருகேஸ்வரன், தேனி மாவட்ட தரக்கட்டுப்பாடு உதவி கோட்ட பொறியாளர் நஷ்ரீன் சுல்தானா, இளநிலை பொறியாளர்கள் அனுசியா, உதயகுமார், ஆகியோர் நடந்து வரும் சாலையின் தரத்தை ஆய்வு செய்தனர்.
மேலும் இப்பணிகளை விரைந்து முடிக்குமாறு நெடுஞ்சாலைத்துறை உயர் அதிகாரிகள், பணி ஒப்பந்ததாரர்களுக்கு உத்தரவிட்டுள்ளனர். மேலும் இந்த மயிலாடும்பாறை வழியாக மல்லப்புரம் செல்லும் அனைத்து கிராமங்களுக்கும் மிகவும் வசதியாக இருக்கும் எனவும் தெரிவித்தனர். முழு அகலத்தில் புதிய சாலை அமைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருவது பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.