மயிலாடுதுறை, செப்.22: மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உள்ள கலையரங்கத்தில் பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் சாலை பாதுகாப்பு ஆய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் அரசு கூடுதல் தலைமை செயலாளர் பிரதீப் யாதவ், கலெக்டர் மகாபாரதி, எம்எல்ஏக்கள் நிவேதா முருகன், ராஜகுமார், பன்னீர்செல்வம், மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் உமாமகேஸ்வரி சங்கர் ஆகியோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது:
இம்மாவட்டத்தில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் ஆய்வு மேற்கொள்ளும் போது, பெருமைக்குரிய இம்மாவட்டத்தில் விபத்தில்லா மாவட்டமாகவும், விபத்தினை குறைத்திடுவதற்கு வேண்டிய நடவடிக்கைகளை எடுக்கவும் திட்டமிடப்பட்டு இக்கூட்டம் நடத்தப்படுகிறது. விபத்தை குறைக்க 5 துறைகளை நாங்கள் ஈடுப்படுத்த உள்ளோம். நெடுஞ்சாலைத்துறை, போக்குவரத்து துறை, காவல்துறை, சுகாதாரத்துறை, கல்வித்துறை இந்த 5 துறைகள் தான் விபத்தில்லா நிலையை உருவாக்க கைக்கோர்த்து செயலாற்றி வருகிறோம். பொதுவாக சொன்னால் நெடுஞ்சாலைத்துறை சீரக, தரமான சாலை அமைக்க வேண்டும். மையத்தடுப்பானை முறையாக அமைக்க வேண்டும். நடைப்பாதைகளை முறையாக அமைக்க வேண்டும்.
அதேபோன்று சமிக்கை விளக்குகளை தரமானதாக பயன்படுத்த வேண்டும். வேகத்தடைகளை முறையாக அமைக்க வேண்டும். பாலம், சாலை பணிகள் நடைபெறும் இடங்களில் சாலை பேரிகார்டுகளை பயன்படுத்த வேண்டும். பயன்படுத்துவோருக்கு தெரியும் வண்ணம் பொதுவாக மயிலாடுதுறை மாவட்டம் கிராம சாலை அதிகமாக இருக்கிற மாவட்டம். இங்கு கிராம சாலைகளை முறையாக அமைத்து, வேகத்தடை அமைக்கவிடில் கிராம சாலையிலிருந்து தேசிய நெடுஞ்சாலை அல்லது மாநில நெடுஞ்சாலைக்கு வாகனத்தில் வருபவர்கள் சாலை விபத்தில் சிக்குகிறார்கள். காவல் துறையை சேர்ந்தவர் தலைகவசம் அணியாதவர்களை கண்காணித்து உரிய அபராதம் விதிக்க வேண்டும். கல்வித்துறை பொருத்தமட்டில் பள்ளிகளில் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் மாநில நெடுஞ்சாலை என்று சொன்னால் 160 கி.மீ. மாவட்ட முக்கிய சாலை 168 கி.மீ. மாவட்ட இதர சாலைகள் 421 கி.மீ.தேசிய நெடுஞ்சாலை 46 கி.மீ ஆக மொத்தம் 855 கி.மீ சாலைகள் தமிழ்நாடு அரசால் நேரடியாக பராமரிக்கப்படுகிறது. அந்த வகையில் 2021- 2022ம் ஆண்டில் நிதியாண்டில் 148 குழாய் பாலங்கள், ஆர்ச் கல்வெட்டாக மாற்றாக முடிவு செய்யப்பட்டு ரூ.27 கோடி ஒதுக்கீடு செய்து பணிகள் நடைபெற்றுள்ளது. 134 பணிகளும் முடிக்கப்பட்டுள்ளது 2021-2022 ஆண்டில் 76 கி.மீ.51 சாலை பணிகளில் ரூ.63 கோடி மதிப்பீட்டில் 41 சாலை பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. 44 கி.மீ நீளமுள்ள 33 சாலைகளை ரூ.64 கோடி மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று கொண்டிருக்கிறது.இதில் 10 பணிகள் முடிவடைந்துள்ளது.மீதமுள்ள பணிகள் ஒரு மாத காலத்தில் முடிவடைந்துவிடும்.
2023-2024 ஆண்டில் 51 கி.மீ சாலைகள் ரூ.65 கோடி மதிப்பீட்டில் பணிகள் எடுக்கப்பட்டுள்ளது. அந்த பணிகள் ஒப்பந்தம் கோரும் பணிகள் நடைபெற்றுள்ளது. ஒருமாத காலத்தில் பணிகள் தொடங்கப்படும். கிராம சாலைகள் தரமான சாலைகளாக அமைக்க தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் ரூ.42 கோடி மதிப்பீட்டில் 31 கி.மீ சாலை பணிகள் எடுக்கப்பட்டுள்ளது. அந்த பணிகள் தற்போது நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த நிதியாண்டில் கிராம சாலை பணிகள் எடுக்க முன்மொழிவுகள் அனுப்பும் பணிகள் நடைபெற்று வருகிறது. 2021-2022ல் தரை பாலங்களை மேம்பாலமாக மாற்றும் பணிகள் ரூ.2 கோடி மதிப்பீட்டில் நடைபெற்றுள்ளது. ரயில்வே மேம்பாலம் அமைக்க மாவட்டத்தில் கல்லணை காவேரி பூம்பட்டினம், பட்டவர்த்தி ரயில்வே மேம்பாலப் பணிக்கு ரூ.18 கோடி ஒதுக்கப்பட்டு நிலம் எடுப்புப் பணிகள் நடைபெற்றுகொண்டு இருக்கிறது.
மயிலாடுதுறை மாவட்டம் தனியாக பிரிக்கப்பட்ட பின், புதியதாக மாவட்ட கலெக்டருக்கு ரூ.144 கோடி நிதி ஒதுக்கீடு செய்து ஆட்சியரகம் கட்டுமான பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. பணிகள் முழுவதும் முடிவுற்றப்பின் தமிழ்நாடு முதலமைச்சர் இசைவு பெற்று மாவட்ட கலெக்டர் அலுவலகம் திறக்கப்பட இருக்கிறார். புதிய மாவட்ட கலெக்டர் அலுவலகம் திறந்தவுடன், இந்த மாவட்டத்தின் வளர்ச்சி மிகவும் சிறப்பாக இருக்கும். இவ்வாறு அமைச்சர் எ.வே.வேலு பேசினார்.
கூட்டத்தில் தலைமை பொறியாளர் நெடுஞ்சாலைகள் சந்திரசேகர், நெடுஞ்சாலைத்துறை ஆராய்ச்சி மைய இயக்குநர் கோதண்டராமன், டிஆர்ஓ மணிமேகலை. நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் பாலசுப்ரமணியன், ஒன்றிய குழு தலைவர்கள் குத்தாலம் மகேந்திரன், கொள்ளிடம் ஜெயபிரகாஷ், மயிலாடுதுறை காமாட்சி மூர்த்தி, மயிலாடுதுறை நகர்மன்றத் தலைவர் செல்வராஜ், சீர்காழி நகர்மன்றத் தலைவர் துர்கா பரமேஸ்வரி, தரங்கம்பாடி பேரூராட்சித் தலைவர் சுகுண சங்கரி, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.