மயிலாடுதுறை, மார்ச் 10: மயிலாடுதுறையில் தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 590 வழக்குகளுக்கு ரூ.2.5 கோடிக்கு தீர்வு காணப்பட்டது. மயிலாடுதுறை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நேற்று முன்தினம் தேசிய மக்கள்நீதிமன்றம் நடைபெற்றது. மாவட்ட அமர்வு நீதிபதி விஜயகுமாரி தலைமையிலும், மயிலாடுதுறை வட்ட சட்டப் பணிகள் குழு தலைவரும், முதன்மை சார்பு நீதிபதி சுதா முன்னிலையிலும் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில், தலைமை குற்றவியல் நடுவர் நீதிபதி மாயகிருஷ்ணன் , குற்றவியல் நடுவர் விரைவு நீதிபதி உம்முல் பரீதா குற்றவியல் நடுவர் நீதிபதி கலைவாணி ஆகியோர் கலந்து கொண்டனர்.
மயிலாடுதுறை மாவட்ட அனைத்து நீதிமன்றங்களிலிருந்தும் சிவில் வழக்குகள், சமரசத்திற்கு எடுத்துக் கொள்ளக்கூடிய குற்ற வழக்குகள், அசல் வழக்குகள், மோட்டார் வாகன விபத்து கோரிக்கை தீர்ப்பாயம் வழக்குகள், குடும்ப நல வழக்குகள், ஜீவனாம்சம் வழக்குகள், நில ஆர்ஜித அசல் மனுக்கள், நிறைவேற்றும் மனுக்கள், சுருக்கு விசாரணை வழக்குகள், மனுக்கள் ஆகிய 590 வழக்குகளுக்கு ரூ.2.5 கோடிக்கு தேசிய மக்கள் நீதிமன்றம் மூலமாக சமரச தீர்வு வழங்கப்பட்டது. இதில் மாயவரம், மயிலாடுதுறை வழக்கறிஞர் சங்க தலைவர்கள், அரசு வழக்கறிஞர்களும், அனைத்து வழக்கறிஞர்களும் மற்றும் அனைத்து வழக்காடிகளும், அனைத்து நீதிமன்ற ஊழியர்களும் கலந்து கொண்டார்கள்.