மயிலாடுதுறை, பிப்.28: மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பத்தாம் வகுப்பு. மேல்நிலை முதலாமாண்டு, மேல்நிலை இரண்டாமாண்டு பயிலும் மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடைபெற உள்ளதை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் மாவட்ட கலெக்டர் மகாபாரதி தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், மாவட்ட கலெக்டர் மகாபாரதி தெரிவித்ததாவது:
தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் மேல்நிலை இரண்டாமாண்டு மாணவர்களுக்கு மார்ச் 3 ம் தேதியும், மேல்நிலை முதலாமாண்டு மாணவர்களுக்கு மார்ச் 5ம் தேதியும், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 28ம் தேதியும் பொதுத்தேர்வு தொடங்கவுள்ளது. அதன்படி, 10ம் வகுப்பில் 6184 மாணவர்களும், 6202 மாணவிகளும் மொத்தம் 12,386 பேரும், 11-ஆம் வகுப்பில் 4915 மாணவர்களும், 5673 மாணவிகளும் மொத்தம் 10.588 பேரும், 12-ஆம் வகுப்பில் 4731 மாணவர்களும், 5501 மாணவிகளும் மொத்தம் 10.232 பேரும், என மொத்தம் 15,830 மாணவர்களும், 17,376 மாணவிகளும் ஆக மொத்தம் 33,206 பேர் தேர்வு எழுத உள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் 33,206 மாணவ/மாணவிகள் தேர்வு எழுத உள்ளனர். வழக்கம்போல் மாணவிகளே இவ்வாண்டும் கூடுதலான எண்ணிக்கையில் தேர்வு எழுதுகின்றனர். இத்தேர்வுக்காக மேல்நிலை இரண்டாமாண்டு, மேல்நிலை முதலாமாண்டு வகுப்புகளுக்கு 39 தேர்வு மையங்களும், பத்தாம் வகுப்பு 52 தேர்வு மையங்களும் அமைக்கப்பெற்றுள்ளன. மேல்நிலை இரண்டாமாண்டு, மேல்நிலை முதலாமாண்டு தேர்வுக்கான அறைக் கண்காணிப்பாளர் பணியில் 801 ஆசிரியர்களும், பத்தாம் வகுப்பிற்கு 639 ஆசிரியர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், தேர்வு முறைகேடுகளைத் தவிர்க்க பத்தாம் வகுப்பிற்கு 61 பறக்கும் படைகளும், மேல்நிலை இரண்டாமாண்டு, மேல்நிலை முதலாமாண்டு தேர்விற்கு 67 நிலையான மற்றும் பறக்கும் படைகள் அமைக்கப்பெற்றுள்ளன. இம்மாவட்டத்தில் மயிலாடுதுறை கூறைநாடு கிட்டப்பா நகராட்சி மேல்நிலைப்பள்ளி மற்றும் சீரகாழி எஸ்எம்ஹெச் மேல்நிலைப் பள்ளியும் வினாத்தாள் கட்டுக்காப்பு மையமாக அமைக்கப்பட்டுள்ளன. இம்மையத்தில் ஆயுதம் ஏந்திய காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், பொதுத்தேர்வு நடைபெறும் நாட்களில் குடிநீர், மின்சாரம் மற்றும் பேருந்து வசதிகள் தங்குதடையின்றி கிடைக்க தொடர்புடைய துறையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட கலெக்டர் மகாபாரதி தெரிவித்தார்.
இக்கூட்டத்தில், ஆர்டிஓ விஷணுபிரியா, மாவட்ட கல்வி அலுவலர் சாந்தி. முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள் முத்துக்களியன், பரமசிவம் ஆகியோர் கலந்து கொண்டனர்.