மயிலாடுதுறை, மே 24:மது போதையில் மனைவி மீது பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்ற கூலித்தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்
மயிலாடுதுறை அருகே நல்லத்துக்குடி சிவன் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகேசன் மகன் கண்ணன்(37). கூலித் தொழிலாளி. இவரது மனைவி மீனாட்சி 34). கண்ணன் மது அருந்திவிட்டு அடிக்கடி மனைவியிடம் தகராறு செய்துவந்துள்ளார். நேற்று முன்தினம் வழக்கம் போல மது அருந்திவிட்டு வந்த கண்ணன், மீனாட்சியிடம் தகராறு செய்துள்ளார். அப்போது கணவன் மனைவிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த கண்ணன் மீனாட்சியின் தலைமுடியை இழுத்து பிடித்து அவர் மேல் பெட்ரோலை ஊற்றி எரிக்க முயற்சித்துள்ளார். இதனைக் கண்ட அக்கம்பக்கத்தினர் மீனாட்சியை மீட்டுள்ளனர். இந்தச்சம்பவம் தொடர்பாக மீனாட்சி மயிலாடுதுறை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த மயிலாடுதுறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருண்குமார் மற்றும் போலீசார் கண்ணனை கைது செய்தனர். பின்னர் கண்ணனை மயிலாடுதுறை கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர்.