மயிலாடுதுறை,ஆக.7: மயிலாடுதுறை பிரைடு ரோட்டரி சார்பில் மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனையில் தாய் பால் வாரவிழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு மயிலாடுதுறை நலப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர்.பானுமதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். தலைமை மருத்துவ அலுவலர் டாக்டர். செந்தில்குமார், மாவட்ட குழந்தைகள் நல மருத்துவர் டாக்டர்.குமாரதேவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
திட்டவிளக்க உரையை டாக்டர். ராஜ்குமார் ஆற்றினார். ரோட்டரி பிரைடு சங்க தலைவர் சத்தியபால், செயலாளர் ஆசிரியர் சரவணன் ஆகியோர் தலைமை ஏற்று விழாவினை நடத்தினர். குழந்தைகள் நல மருத்துவர் டாக்டர் பாலாஜி தலைமையில் ரோட்டரி உறுப்பினர்கள் விழா ஏற்பாடுகளை செய்தனர். விழாவில் 100 புதிய தாய்மார்களுக்கு ஊட்ட சத்து பெட்டகம் வழங்கப்பட்டது.