மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் புகழ்பெற்ற குருபரிகார ஆலயமான வதான்யேஸ்வரர் ஆலய கும்பாபிஷேகம் செப்டம்பர் 10ம் தேதி நடைபெற உள்ள நிலையில் ஆலயத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்வது குறித்து போலீஸ் எஸ்பி மீனா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான புகழ்பெற்ற வதான்யேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. குரு பரிகார ஆலயமான இங்கு ரிஷப தேவரின் கர்வத்தை இறைவன் அடக்கியதாக புராண வரலாறு கூறுகிறது. இந்த ஆலயத்தின் கும்பாபிஷேகம் வருகின்ற 10ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான யாகசாலை பூஜைகள் துவங்கி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் எஸ்.பி., மீனா மற்றும் காவல்துறையினர் ஆலயத்தில் செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் மற்றம் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்வது குறித்து ஆய்வு மேற்கொண்டனர். பக்தர்கள் சிரமம் இல்லாமல் சாமி தரிசனம் செய்யும் வகையில் கோயில் உள்ளே சென்று வெளியேறும் பாதைகள் அமைப்பது. ராஜகோபுரம் மேலே செல்லும் வழிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் ஆய்வு செய்தார். பின்னர் தருமபுரம் ஆதீனம் 27வது குருமகா சன்னிதானம் ல மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகளை நேரில் சந்தித்து ஆசி பெற்று கும்பாபிஷேக பணிகள் குறித்து கலந்துரையாடினர். ஆய்வில் டி.எஸ்.பி., சஞ்சீவ் குமார் மற்றும் இன்ஸ்பெக்டர் செல்வம் உள்ளிட்ட காவல்துறையினர் உடனிருந்தனர்.