மயிலாடுதுறை, ஜூலை 1: மயிலாடுதுறை நகராட்சி நகர் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த கடையை பூட்டி அதிகாரிகள் சீல் வைத்தனர்.
மயிலாடுதுறை நகராட்சிக்குட்பட்ட பகுதியில் நகராட்சி ஊழியர்கள் அரசால் தடை செய்யப்பட்ட பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்பறு குறித்து கடைகளில் ஆய்வு செய்தனர். அப்படி தடை செய்யப்பட்ட பொருட்களை கண்டுபிடிக்கப்பட்டால், சம்மந்தப்பட்ட கடை நடத்துவர் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கவும், சம்மந்தப்பட்ட கடையை பூட்டி சீல் செய்திடவும் மாவட்ட கலெக்டர் உத்தரவின் பெயரில், நகராட்சி ஆணையர் அறிவுறுத்தலின் படியும், உணவு பாதுகாப்பு அலுவலர் சீனிவாசன், நகர் நல அலுவலர் ஆடலரசி தலைமையில் துப்புரவு அலுவலர் டேவிட் பாஸ்கர் ராஜ், கொண்ட குழுக்கள் வண்டிக்காரன் தெரு, நாராயணன் பிள்ளை தெரு, பஜனை மட தெரு, ஆகிய பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது மாமரத்து மேடை சாலையில் உள்ள ராஜேந்திரா பேன்சி ஸ்டோர் என்ற கடையில் ஆய்வு மேற்கொண்டதில் அரசால் தடை செய்யப்பட்ட கூலிப், பான்மசாலா, குட்கா என சுமார் ரூ.10,000 மதிப்புள்ள தடை செய்யப்பட்ட பொருட்கள் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, அந்த பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்ததோடு, கடையை பூட்டி சீல் வைத்தனர்.