மயிலாடுதுறை, ஆக.12: மயிலாடுதுறையில் நடைபெற்ற சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர்கள் சங்கத்தின் மாவட்ட பேரவை கூட்டத்தில், குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.6,750 அகவிலைப்படியுடன் வழங்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மயிலாடுதுறை டி.எல்.சி நடுநிலைப் பள்ளியில் தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர்கள் சங்கத்தின் மாவட்ட பேரவை கூட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் சந்திரா தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர் மதிவாணன், முன்னாள் மாநில செயலாளர் புலவர் சாமி செல்வம், மாவட்ட செயலாளர் ராமலிங்கம், ஏஐடியூசி மாவட்ட தலைவர் ராஜ்மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மயிலாடுதுறை ஒன்றிய தலைவர் மாரியப்பன் வரவேற்றார். மாவட்ட செயலாளர் கமலநாதன் செயலர் அறிக்கை வாசித்தார்.
தமிழ்நாடு ஓய்வூதியர் நலசங்க மாநில பொதுச் செயலாளர் மகாலிங்கம், ஏஐடியூசி மாநிலச் செயலாளர் சந்திரகுமார், தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன் வாடி ஓய்வூதியர்கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் மாயமலை உள்பட பலர் பேசினர். குத்தாலம், செம்பனார்கோவில், சீர்காழி, கொள்ளிடம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த ஓய்வூதியர்கள் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர்களுக்கு நாளொன்றுக்கு ரூ 65.75 வழங்கப்படுகிறது. எனவே ஊழியர்களின் வாழ்வாதார நிலையை கருதி குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.6,750 அகவிலைப்படியுடன் வழங்க வேண்டும். குடும்ப நல நிதி 25,000 வழங்க வேண்டும். ஆசிரியர்கள் மற்றும் மேற்பார்வையாளராக பதவி உயர்வு பெற்று ஓய்வு பெற்றவர்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு கோரிக்கை தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மாவட்டத் துணைத் தலைவர் ஜோதி நன்றி கூறினார்.