மயிலாடுதுறை,ஆக.21: மயிலாடுதுறையில் நடைபெற்ற குறுவட்ட அளவிலான தடகளப் போட்டிகளில் மாணவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.தமிழ்நாடு அரசு பள்ளி கல்வித்துறை சார்பில் கண்டபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி சார்பில் நடத்தும் குறுவட்ட அளவிலான தடகளப் போட்டிகள் நடைபெற்றது. மயிலாடுதுறையில் உள்ள சாய் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டிகளை முதன்மை கல்வி அலுவலர் ஜெகநாதன் தொடங்கி வைத்தார். இதில் குத்தாலம் வட்டாரத்திற்கு உட்பட்ட பள்ளிகளை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து வயது வாரியாக மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தப்பட்டது. மேலும் போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது. அடுத்த கட்டமாக மாவட்ட அளவில் நடைபெறும் போட்டிகளுக்கு தகுதி பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும். தொடர்ந்து உடற்கல்வி ஆசிரியர் கார்த்திகேயன் மேற்பார்வையிலும், பட்டதாரி ஆசிரியர் வடிவேலன் மற்றும் குத்தாலம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் சுவாமிநாதன் முன்னிலையிலும் நடைபெற்ற நிகழ்வு பல்வேறு ஆசிரியர்கள் மற்றும் விருந்தினர்கள் கலந்து கொண்டனர்.