மயிலாடுதுறை, செப்.22: மயிலாடுதுறையில் நகராட்சி அதிகாரிகள் அதிரடி சோதனையில், 50 கிலோ கெட்டுப்போந இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டு, 4 கடைகளுக்கு ரூ.27ஆயிரம் அபராதம் விதித்தனர்.
சவர்மா சாப்பிட்ட நாமக்கல் மாணவி பிரதாபமாக உயிரிழந்தார். இதை அடுத்து தமிழ்நாடு முழுவதும் உணவகங்களில் சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி குளிர்சாதனை பெட்டிகளில் வைத்திருந்த நாள்பட்ட மாமிசங்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள உணவகங்களில் நகராட்சி அதிகாரிகள் நேற்று திடீரென அதிரடி சோதனை நடத்தினர். மயிலாடுதுறை நகராட்சி ஆணையர் சங்கர் தலைமையில் மயிலாடுதுறை நகராட்சி பகுதியான கூறைநாடு, பூக்கடை தெரு, அரசு மருத்துவமனை சாலை, பழைய பேருந்து நிலையம் அருகே உள்ளிட்ட பகுதிகளில் நகராட்சி ஆய்வாளர் பிருந்தா சோதனை மேற்கொண்டனர்.
இந்த சோதனையில் கடைகளில் செய்யப்படும் உணவுகளின் தரம், உணவகங்களில் பயன்படுத்தப்படும் எண்ணெய் ஆகியவை குறித்து சோதனை செய்யப்பட்டது. அப்போது பல்வேறு உணவகங்களில் சுமார் 50 கிலோ கெட்டுப்போன இறைச்சிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் நான்கு கடைகளுக்கு ரூ.27 ஆயிரம் அபராதம் விதித்தனர். மேலும் இதுபோன்று தரமற்ற இறைச்சி பொருட்களை விற்பனை செய்தால் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என்று எச்சரித்தனர்.