மயிலம், பிப். 17: மயிலம் செண்டூர் சந்திப்பு சாலை அருகே மயிலம் போலீசார் நேற்று காலை வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது செய்யார், அம்மன் கோயில் தெருவை சேர்ந்த முத்து மகன் ஆனந்தபாபு (28), அதே பகுதியை சேர்ந்த வேலு மகன் தனசேகர் (23) ஆகிய 2 பேரும் புதுச்சேரியில் இருந்து வந்தவாசி மார்க்கமாக இருசக்கர வாகனத்தில் வந்துள்ளனர். அவர்கள் மீது சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களை மடக்கிப் பிடித்து விசாரணை செய்ததில் தமிழகத்தில் விற்பனைக்கு தடை செய்யப்பட்டுள்ள 100 புதுச்சேரி மதுபாட்டில்களை இருசக்கர வாகனத்தில் பதுக்கி வைத்து கடத்தியது தெரியவந்தது.
இதேபோன்று மயிலம் அடுத்துள்ள சிறுவை கிராமம் பேருந்து நிறுத்தம் அருகே சந்தேகப்படும்படியாக இருசக்கர வாகனத்தில் வந்த வீடூர் கிடுவன் தெருவை சேர்ந்த செல்வராஜ் மகன் நாகவேல் (35) என்பவரை நிறுத்தி சோதனை செய்ததில் புதுச்சேரியில் இருந்து தடை செய்யப்பட்ட சாராய பாக்கெட்டுகளை இருசக்கர வாகனத்தில் கடத்தி வந்தது தெரியவந்தது. மேற்கண்ட 3 பேரையும் கைது செய்த போலீசார் 100 மது பாட்டில்கள், 20 சாராய பாக்கெட்டுகள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.