காட்டுமன்னார்கோவில், ஜூன் 6: காட்டுமன்னார்கோவில் அருகே மயான பாதை இல்லாததால் இறந்தவர் உடலை வயல்வெளியில் சுமந்து சென்ற வீடியோ வலைதளங்களில் வைரலாகி உள்ளது. கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அடுத்து உள்ள குருங்குடி வடக்கு தெருவில் 70க்கும் மேற்பட்ட பழங்குடியின குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் பல ஆண்டுகளுக்கும் மேலாக மயானத்திற்கு முறையான பாதை வசதி இல்லாமல் பழங்குடியினர் மக்கள் கடும் இன்னலுக்குள்ளாகி வருகின்றனர். மேலும் இந்த பகுதியில் இறப்பவர்களை இவர்களுக்கு என்று உள்ள மயானத்தில் இறுதி சடங்கு செய்ய கொண்டு செல்ல வேண்டுமென்றால் வயல்வெளியில் இறங்கிதான் தூக்கி செல்லும் அவலநிலை உள்ளது.
இந்நிலையில் நேற்று இதே பகுதியை சேர்ந்த அரசன்(70) என்ற முதியவர் இறந்துவிட்டார். அவரது உடலை கிராமத்தினர் சுமார் ஒரு கிலோமீட்டர் விவசாய வயல்வெளியில் இறங்கி முட்புதர்களின் வழியாக உடலை எடுத்து சென்றனர். இந்த காட்சிகள் வீடியோவாக சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த பழங்குடியினர் வசிக்கும் பகுதியில் வட்டாட்சியர் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் நேரடியாக ஆய்வு செய்து மயான பாதை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் வெகுநாட்களாக கோரிக்கை வைத்துவருவது குறிப்பிடத்தக்கது.