திருச்சி, நவ.17: திருச்சியில் வாலிபரிடம் நகை, செல்போனை திருடிய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். திருச்சி ஸ்ரீரங்கம் திருவள்ளுவர் வீதியை சேர்ந்தவர் தண்டபாணி(39). இவர் கடந்த 11ம் தேதி இரவு தனது நண்பர் குணசீலன் என்பவருடன் ஒரு விழாவில் பங்கேற்றார். பின்னர் விழா முடிந்து இருவரும் டிவிஎஸ் டோல்கேட், செந்தண்ணீர்புரம் பஸ் ஸ்டாப் அருகே நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது தண்டபாணி திடீரென மயங்கினார்.
தொடர்ந்து, உதவிக்காக அப்பகுதியில் இருந்தவர்கள் வந்ததாக கூறப்படுகிறது. சிறிது நேரம் கழித்து மயக்கம் தெளிந்து தண்டபாணி எழுந்தார். அப்போது, அவர் கழுத்தில் அணிந்திருந்த 12 பவுன் நகை மற்றும் செல்போன் மாயமானதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதன் மொத்த மதிப்பு ரூ.1 லட்சத்து 30 ஆயிரம். இதுகுறித்து தண்டபாணி அளித்த புகாரின்பேரில் பொன்மலை குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.