மன்னார்குடி, ஜூன் 28: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தெப்பக்குளம் மேல்கரையை சேர்ந்தவர் ராஜ்(58). மேல நெம்மேலியை சேர்ந்தவர் ரவி(52). நண்பர்களான இருவரும் சேர்ந்து மன்னார்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை அருகில் டீக்கடை நடத்தி வருகின்றனர். நேற்று முன்தினம் காலை கடைக்கு வந்தபோது பின்பக்க கதவு உடைந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே கல்லா பெட்டியில் வைத்திருந்த ரூ.15,000 ரொக்கம் மற்றும் ரூ.6,000 மதிப்பிலான சிகரெட் பண்டல்கள் திருட்டு போனது தெரியவந்தது.
இதையடுத்து கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்வையிட்டனர். அதில் நேற்று முன்தினம் இரவு தலையில் முண்டாசு கட்டிய மர்மநபர் ஒருவர் கடையின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்து அங்கு பொருத்தப்பட்டிருந்த ஒரு கண்காணிப்பு கேமராவை மேல்நோக்கி திருப்பி வைப்பதும், பின்னர் கல்லா பெட்டியில் வைத்திருந்த பணம் மற்றும் சிகரெட் பண்டல்களை திருடி செல்வதும் பதிவாகியிருந்தது.
இதுகுறித்து ராஜ், ரவி ஆகியோர் அளித்த புகாரின்பேரில் மன்னார்குடி நகர போலீசார் டீக்கடையை பார்வையிட்டனர். திருவாரூரில் இருந்து வந்த கைரேகை நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிந்து டீக்கடையில் கைவரிசை காட்டிய மர்மநபரை தேடி வருகின்றனர்.இந்த டீக்கடையில் ஏற்கனவே மூன்று முறை திருட்டு போன நிலையில் 4வது முறையாக மர்மநபர் மீண்டும் கைவரிசை காட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.