ஈரோடு, ஆக.7: ஈரோடு நாடார்மேடு, காய்காரிபள்ளம், லெனின் வீதியை சேர்ந்தவர் தர்மராஜ். இவரது மனைவி சுமதி (27). காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். கணவர் தர்மராஜ் தினமும் குடித்துவிட்டு வந்ததால் சுமதி மனமுடைந்த நிலையில் இருந்து வந்தார். மேலும், தனக்கு உடல்நிலை சரியில்லை என்றும், கடன் தொல்லையும் அதிகரித்து வருவதாக கடந்த 3 நாட்களுக்கு முன்பு தனது தாயார் விஜயலட்சுமியிடம் சுமதி புலம்பி வந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்த சுமதி வீட்டின் கதவை உட்புறமாக பூட்டிக்கொண்டு இரும்பு விட்டத்தில் நைலான் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பின்னர், வீட்டிற்கு வந்த கணவர் தர்மராஜ் நீண்ட நேரமாக கதவை தட்டியும் திறக்காததால் ஓட்டை பிரித்து உள்ளே பார்த்த போது சுமதி தூக்கில் தொங்கி கொண்டிருப்பதை பார்த்து உடனடியாக மீட்டு ஈரோடு அரசு மருத்துமவனைக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இது குறித்து ஈரோடு தெற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.