நெல்லை, மே 30: நாங்குநேரி அருகே விஜயநாராயணம் அடுத்த கீழ பண்டாரபுரம், வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் தாமோதரன் (37). கூலி தொழிலாளி. இவரது மனைவி அன்னலெட்சுமி (35). இவரிடம் கடந்த 27ம்தேதி மதுபோதையில் இருந்த தாமோதரன் தகராறில் ஈடுபட்டதுடன் மனைவியை கம்பால் தாக்கி உள்ளார். இதில் அன்னலெட்சுமியின் கையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் திசையன்விளை அருகே நாட்டு வைத்தியரிடம் கட்டு போட்டு வந்தார்.
நேற்று காலை மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது தாமோதரன் மதுகுடிக்க பணம் கேட்டு அரிவாளால் மனைவியை வெட்ட முயன்தாகக் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அன்னலெட்சுமி போலீஸ் அவசர உதவி எண்ணில் புகார் செய்தார். சம்பவ இடத்திற்குச் சென்ற விஜயநாராயணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தாமோதரனை கைது செய்தனர். மதுகுடிக்க பணம் கேட்டு மனைவியை கணவர் அரிவாளால் வெட்ட முயன்ற சம்பவம் விஜயநாராயணம் சுற்றுவட்டார பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.