வேலூர், ஜூன் 24: வேலூரில் வரதட்சணை கேட்டு சித்ரவதை ெசய்து தற்கொலைக்கு தூண்டிய கணவன், மாமியாருக்கு வேலூர் மகளிர் நீதிமன்றம் தலா 7 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
வேலூர் சேண்பாக்கத்தை சேர்ந்தவர் இனாயத்துல்லா. இவரது மனைவி தில்ஷாத்பேகம்(62). இவரது மகன் இம்ரான்(33). இவருக்கும் வந்தவாசியை சேர்ந்த நாசியா(24) என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில், நாசியாவிடம் அவரது கணவர் இம்ரானும், மாமியார் தில்ஷாத்பேகமும் கூடுதல் வரதட்சணை கேட்டு அடித்து சித்ரவதை செய்துள்ளனர்.
இதனால் விரக்தியடைந்த நாசியா, கடந்த 2018ம் ஆண்டு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக நாசியாவின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் வேலூர் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து கணவன் இம்ராைனயும், மாமியார் தில்ஷாத்பேகத்தையும் கைது செய்தனர்.
இவர்கள் மீதான வழக்கு விசாரணை வேலூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் மகளிர் நீதிமன்றத்தில் நடந்தது. இறுதிக்கட்ட விசாரணைகள் முடிந்து நேற்று நீதிபதி ராதாகிருஷ்ணன், நாசியாவின் தற்கொலைக்கு காரணமான கணவன் இம்ரான், மாமியார் தில்ஷாத்பேகம் ஆகிய இருவருக்கும் தலா 7 ஆண்டு சிறைத்தண்டனையும், ரூ.55 ஆயிரம் அபராதமும், அபராதம் கட்டத்தவறினால் மேலும் 6 மாதங்கள் கூடுதல் சிறைத்தண்டனையும் அனுபவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.