செங்கல்பட்டு, ஜூன் 20: செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் விளம்பூர் பகுதியை சேர்ந்தவர் குப்புசாமி என்பவரது மகன் சங்கர். இவரது மனைவி ஈஸ்வரியுடன் விளம்பூர் பகுதியில் வசித்து வந்தார். இந்நிலையில், நாளடைவில் இருவரும் இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக ஈஸ்வரி பெரிய காட்டுப்பாக்கத்தில் உள்ள தனது தாய்வீட்டில் வசித்து வந்துள்ளார். மேலும், மனைவி ஈஸ்வரி நடத்தையின் மீது சங்கருக்கு சந்தேகம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த 23.10.2022 அன்று பெரிய காட்டுப்பாக்கத்திற்கு சென்று தன் மனைவி ஈஸ்வரி மீது நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தின் பேரில் அவர் தங்கியிருந்த வீட்டிற்கு சென்று அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றிப்போன நிலையில் ஆத்திரமடைந்த சங்கர் தனது மனைவியின் கழுத்தை நெறித்து கொலை செய்தார்.
இது குறித்து வழக்கு பதிவு செய்து சங்கரை கைது செய்து சிறையில் அடைத்த திருக்கழுக்குன்றம் போலீசார் வழக்கு தொடர்ந்திருந்தனர். அந்த வழக்கு செங்கல்பட்டு மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் நேற்று இறுதிக்கட்ட விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த மகிளா நீதிமன்ற நீதிபதி எழிலரசி குற்றம் சாட்டப்பட்ட சங்கர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு ஆயுள் தண்டனையும் ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இந்த வழக்கை அரசு தரப்பு வழக்கறிஞர் சசிகலா லோகநாதன் ஆஜராகி வாதாதினார்.