கடலூர், மார்ச் 14:கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே உள்ள விழப்பள்ளம் பகுதியை சேர்ந்தவர் தேசிங்கு. இவரது மனைவி ரத்தினாபதி. இவர்களது மகள் தமிழ்ச்செல்வி(35). இவரும் அதே பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளியான சண்முகம்(45) என்பவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு சதீஷ்ஸ்ரீ, ஷர்மிளா, சத்திய பிரியா என்ற 3 மகள்களும், சஞ்சய், சம்பத் என்ற 2 மகன்களும் உள்ளனர். சண்முகத்துக்கு குடிப்பழக்கம் அதிகம் உள்ளதால், இவர் அடிக்கடி குடித்துவிட்டு வந்து தமிழ்ச்செல்வியிடம் தகராறு செய்துள்ளார்.
மேலும் ரத்தினாபதிக்கு சொந்தமான வீட்டை தனது பெயருக்கு எழுதி தர சொல்லி தினமும் தமிழ்ச்செல்வியை கொடுமைப்படுத்தி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 18.9.2017 அன்று மீண்டும் சண்முகம் மது போதையில் வந்து தமிழ்ச்செல்வியிடம் வீட்டை எழுதி கேட்டு தகராறு செய்துள்ளார். இதற்கு தமிழ்ச்செல்வி ஒப்புக் கொள்ளாததால் அவரை சவுக்கு கட்டையால் அடித்துள்ளார். இதை தடுக்க வந்த மகள் சதீஷ் ஸ்ரீயையும் அவர் அடித்துள்ளார்.
இந்நிலையில் மீண்டும் 20.9.2017 அன்று மாலை சண்முகம், தமிழ்ச்செல்வியை கொலை வெறியுடன் தாக்கியுள்ளார். இதை பார்த்த அவரது மகள் ஷர்மிளாவையும் தடியால் தாக்கியுள்ளார். இந்த தாக்குதலில் படுகாயமடைந்த தமிழ்ச்செல்வி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து சண்முகத்தை கைது செய்தனர்.
மேலும் அவர் மீது கடலூர் மகிளா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். சாட்சிகள் விசாரணை நடந்து வந்த நிலையில், நேற்று இந்த வழக்கில் நீதிபதி லட்சுமி ரமேஷ் தீர்ப்பு கூறினார். அவர் தனது தீர்ப்பில் சண்முகத்தின் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.1 லட்சத்து பத்தாயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் வளர்மதி ஆஜராகி வாதாடினார்.