வந்தவாசி, ஆக. 18: வந்தவாசி அடுத்த மங்கல மாமண்டூர் கூட்டுச்சாலை பகுதியைச் சேர்ந்தவர் மாவீரன்(33) லாரி டிரைவர். இவர் சென்னையில் உள்ள சேம்பரில் வேலை செய்து வருகிறார். கடந்த 11ம் தேதி அன்று மாவீரன் வீட்டில் இருந்தபோது அவரது மனைவி ஜோதிக்கு சாலவேடு கிராமத்தைச் சேர்ந்த அருண்குமார்(25) செல்போன் மூலம் பேசியதாக கூறப்படுகிறது. இதனை அறிந்த மாவீரன் அருண்குமாரிடம் ஏன் எனது மனைவியுடன் செல்போனில் பேசுகிறாய் என கேட்டுள்ளார். இதில் இருவருக்கும் செல்போனில் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து அருண்குமார் தனக்கு சொந்தமான லோடு ஆட்டோவில் அவரது மனைவி சுவேதா (22) அண்ணன் ஆல்பர்ட் (29) உறவினர் முருகன் மகன் சுரேந்தர் (22) ஆகியோருடன் மங்கல மாமண்டூர் கிராமம் வந்து மாவீரனிடம் தகராறு செய்து சரமாரியாக தடியாலும், கட்டையால் அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த மாவீரன் உறவினர்கள் உதவியுடன் வந்தவாசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டார். சம்பவம் குறித்து மாவீரன் நேற்று கீழ்கொடுங்காலூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் சப் இன்ஸ்பெக்டர் புஷ்பாகரன் வழக்குப்பதிவு செய்து அருண்குமார், சுவேதா, ஆல்பர்ட் ஆகிய மூவரையும் கைது செய்தார். மேலும் தலைமறைவாக உள்ள சுரேந்திரனை வலைவீசி தேடி வருகிறார்.