Saturday, June 3, 2023
Home » மனித வாழ்க்கையை மலரச் செய்யும் “மனைவி” எனும் மாபெரும் பொக்கிஷம்!!

மனித வாழ்க்கையை மலரச் செய்யும் “மனைவி” எனும் மாபெரும் பொக்கிஷம்!!

by kannappan
Published: Last Updated on

“மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்…!”- கவியரசு கண்ணதாசன்கிடைத்தற்கரியது மானிடப்பிறவி! அதனினும் அரிது உடல், மற்றும் மனக்குறையின்றிப் பிறப்பது!! இவையனைத்தயும் விட மிக, மிக அரிது தெய்வ பக்தி, ஒழுக்கம், ஒற்றுமை, கட்டுப்பாடு, அன்பு, பாசம் ஆகியவற்றால் உயர்ந்த, நல்ல குடும்பத்தில் குழந்தையாகப் பிறத்தல்! அமுதினும் இனிய தாய்ப் பால் பருகி, பாசத்தினால் வளர்ந்து, தந்தையின் அன்பினால் படித்து, தொழில் அல்லது உத்தியோகத்தில் அமர்ந்த பின்புதான் ஆரம்பமாகிறது, வாழ்வின் மிக முக்கியமானதும், இரண்டாவது பகுதியுமான  “குடும்ப வாழ்க்கை!”.மிகப் பெரிய பொறுப்புகளை நம் மீது சுமத்தும் இந்த இரண்டாம் பகுதிதான், நமது பிறவிப் பயனுள்ளதாக அமையுமா அல்லது பயனற்று வீண் பிறவியாகிவிடுமா என்பதை நிர்ணயிக்கிறது! நம் வாழ்க்கையின் இறுதி காலகட்டம் எவ்விதம் இருக்கும் என்பதும் இந்த இரண்டாம் காலகட்டம் அமைவதைப் பொறுத்தே அமையும்! இத்தகைய மகத்தான முக்கியத்துவம் வாய்ந்த மனிதப் பிறவியின் சுக துக்கங்களைத் தீர்மானிக்கும் இரண்டாம் பகுதி எவ்விதம் இருக்கும் என்பது, ஒவ்வொருவருக்கும் அமையும் மனைவியின் குண நலன்களைப் பொறுத்தே இருக்கும் என்பதை இதிகாச இரத்தினங்கள் என இன்றும் பூஜிக்கப்படும் “ஸ்ரீ மத் ராமாயணமும்“, “ஸ்ரீமத் மஹாபாரதமும்”  எடுத்துக்காட்டுகின்றன.தெய்வ பக்தி, பொறுமை, கற்பு, புத்தி கூர்மை, அடக்கம், பிற ஜீவன்களிடத்து கருணை, நியாயமற்ற ஆசைகள், அகந்தை, பொறாமை இல்லாத தூய மனம் ஆகியவற்றினால் உயர்ந்த, உத்தமமான மனைவியைவிட, ஓர் மேலான ஐஸ்வரியம் வேறெதுவும் கிடையாது, மனிதப் பிறவி எடுப்பவர்களுக்கு என்பதை உபநிஷத்துக்களும் பல நிகழ்ச்சிகளை உதாரணத்துடன் எடுத்துக்காட்டியுள்ளன. இவற்றிற்கு மாறாக, பொறாமையும், பேராசையும் கொண்ட பெண், மனைவியாக அமைந்துவிட்டால், “அவளிடம்கூட கூறாமல் சன்னியாசம் பெற்றுக்கொள்…!” என்றும், அத்தகைய மனைவியுடன் வாழ்வதைவிட, “கடும் புலி வாழும் காடு நன்றே…!” எனவும் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரே தங்கள் திருவடி ஸ்பரிசத்தினால் புனித தமிழகத்தைப் புண்ணிய பூமியாக மாற்றிய நம் பழம்பெரும் முன்னோர்கள் கூறியுள்ளார்கள்.நம் ஒவ்வொருவரின் வாழ்க்கை மட்டுமல்லாமல், நமது இறுதிக்காலமும் எவ்விதம் முடியும் என்பதும், நமக்கு அமையும் மனைவியைப் பொறுத்தே அமையும் என்பதையும் தெய்வீக மகா காவியமான ஸ்ரீத் ராமாயணத்தில் வால்மீகி மகரிஷி, மந்திரி சுமந்திரன் வாயிலாக ஓர் சுவையான நிகழ்ச்சி மூலம் விவரித்துள்ளார். கற்புக்கரசி சாவித்திரியினால் அவரது கணவர் சத்தியவான், மாமியார்-மாமனார் அனைவருக்கும் மறுவாழ்வு கிட்டியது! ஆனால், கைகேசியினால் மன்னர் தசரதர் மனம் நொந்து, மரணமடைய நேரிட்டது!!அயோத்தியை அடுத்த கேகய நாட்டை ஆண்டுவந்த கைகேயின் தந்தையான கேகயனுக்கு ஒரு கட்டத்தில் அரண்மனை ஆடம்பர வாழ்க்கை திகட்டியது; சலிப்படைந்தான். அதனால், தனிமையான ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் சிறிது காலமாவது வாழ ஆசைப்பட்டான். தன் பிள்ளைகள் இருவரையும் அரண்மனைப் பணிப்பெண்களிடம் விட்டுவிட்டு, தன் மனைவியை (கைகேயியின் தாய்) கூட்டிக்கொண்டு, காட்டிற்குப்போனார். அங்கு ஒரு குடிசை அமைத்துக்கொண்டு சந்தோஷமாக வாழ்ந்துவந்தார். ராணியின் அழகில் மயங்கியிருந்தான்.இந்நிலையில், கேகயனுக்கு ஒரு கந்தர்வன் அபூர்வ வரத்தைக் கொடுத்திருந்தான். அது வாயில்லா ஜீவன்கள் பாஷையைப் புரிந்துகொள்ளும் திறனை வரமாகக் கொடுத்த கந்தர்வன், அந்தத் திறமையை கேகயன் ரகசியமாக வைத்திருக்க வேண்டும் என்றும் யாருக்காவது சொன்னால், தலை சுக்குநூறாக வெடித்துச் சிதறிவிடும் என்ற நிபந்தனையையும் விதித்திருந்தான். எனவே, ஆபத்தை உணர்ந்திருந்த கேகயன், தன் விசேஷ பாஷை ஞானம் பற்றி மனைவியிடமும்கூட சொல்லாமல், ரகசியம் காத்து வந்தான்.ஒருநாள்  மன்னன், கட்டிலில் படுத்துக்கொண்டிருந்தபோது, ஒரு எறும்புக் கூட்டம் அந்தப் பக்கம் வந்தது, தன் பயணத்தைக் குறுக்கிட்ட கட்டில் கால் அருகே தயங்கி நின்றது. அதைப் பார்த்த ராணி எறும்பு, “ஏன் எல்லோரும் நிற்கிறீர்கள்? இந்தப் பகுதியைக் கடந்து செல்லுங்கள்” என்று உத்தரவிட்டது. அதற்கு மற்ற எறும்புகள், “இந்த இடத்தை மன்னன் கட்டிலால் மறித்திருக்கிறான். அதனால் செல்ல முடியவில்லை!” என்றன. இதைக் கேட்ட ராணி எறும்பு, “இந்த மன்னனைக் கட்டிலோடு தூக்கிப் போட்டுவிட்டு, மேற்கொண்டு அப்பால் செல்லுங்கள்!” என்றது. இதைக் கேட்ட மன்னன் சிரிக்க ஆரம்பித்தான். பின் எழுந்து, தன்னுடைய கட்டிலை சற்று நகர்த்திப் போட்டு, அந்த எறும்புகளுக்கு வழி கொடுத்தான். இதைக் கண்ட ராணி எறும்பு, “இவன், நாம் பேசியதைக் கேட்டு பயந்துவிட்டான் போலிருக்கிறது” என்றது! ராணி எறும்பின் அறியாமையையும், அகந்தையையும் கண்டு, மன்னன்  மேலும் பலமாகச் சிரிக்க ஆரம்பித்தான் கேகயன்! இவற்றையெல்லாம் அருகிலிருந்து பார்த்துக்கொண்டிருந்த அவன் ராணி, “எவளை நினைத்துத் தனியாகச் சிரித்துக்கொண்டிருக்கிறீர்கள்?” எனக் கேட்டாள். அதற்கு அவன், ஒன்றுமில்லை என்று மழுப்பினான். அதனால், அவன் மீது மேலும் சந்தேகம் கொண்டாள்.நம் கணவருக்கு வேறு பெண்களிடம் தொடர்பு இருக்கும் போலிருக்கிறது என்று பெண்களுக்கே உரித்தான முறையில் சந்தேகம் வந்தது. அதனால்தான் அவர் தனியே சிரிக்கிறார்; காரணமும் சொல்ல மறுக்கிறார் என்று நினைத்தாள். காரணத்தைச் சொல்ல வற்புறுத்தினாள். அவரோ, நான் இதை உன்னிடம் சொன்னால் என் தலைவெடித்து இறந்துவிடுவேன் என்றார். எனினும் அவள் பிடிவாதமாக, நீங்கள் சொல்லியே ஆகவேண்டும் என்று மீண்டும் வற்புறுத்தினாள். காரணத்தைச் சொல்ல முடியாத கேகயன், என்ன விஷயமென்று சொன்னால் என் உயிர் போய்விடும். அது பரம ரகசியம் சொல்லமாட்டேன். நான் இறந்துவிட்டால், ஈமக்கிரியை செய்யக் கூட இங்கு யாரும் இல்லை; உன்னாலும் செய்ய முடியாது. அரசனாக வாழ்ந்த நான், இப்படி அநாதையாக இறக்க வேண்டுமா? சந்தனத்தாலும், வாசனைத் திரவியங்களினாலும் வளர்ந்த என் உடலை நாய்களும், நரிகளும், கழுகுகளும், கோட்டான்களும் பிய்த்துத் தின்ன வேண்டுமா? என்று பரிதாபமாகக் கேட்டார். அதற்கு அவள் ரகசியத்தைத் தலையில் வைத்துக் கொள்ளாமல் சொல்லிவிடுங்கள்; நீங்கள் இறந்தாலும் பரவாயில்லை! என்றாள், அந்த “அதர்ம பத்தினி”!!அவருக்கு வேறு வழி தெரியவில்லை.  காட்டி லிருந்து விறகுகளையெல்லாம் எடுத்துவந்து தனக்குத்தானே சிதை அமைத்துக்கொண்டார். அதில் படுத்துக்கொண்டு நான் ரகசியத்தைச் சொன்னவுடன் என் தலை வெடித்துவிடும். அதன்பின், என் உடலை எரித்துவிட்டு, நீ அரண்மனைக்குச் சென்று நம் நாட்டையும், பிள்ளைகளையும் நன்றாகக் கவனித்துக்கொள் என்று சொன்னார். அதற்கும் அவள் பதற்றமடையாமல், பரவாயில்லை, நீங்கள் ரகசியத்தைச் சொல்லுங்கள் என்று வற்புறுத்தினாள்.அந்தச் சமயத்தில் இரண்டு ஆடுகள் பேசிக்கொள்ளும் குரல் கேட்டு, கேகயன் அந்தப் பக்கம் திரும்பினான். அப்போது ஒரு பெண் ஆடு, ஆண் ஆட்டிடம், “கிணற்றிற்கு உள்ளே நல்ல பசுமையான கோவைத் தழை இருக்கிறது;  நான் எவ்வளவு முயன்றும் அதை எடுக்க முடியவில்லை. அதை எடுத்துத் தாருங்கள்” என்று கேட்டது. உடனே ஆண் ஆடு, கிணற்றுக்குள் தலையை விட்டுத் தழையைப் பறிக்க முயன்றது; ஆனால், முடியவில்லை. அதைப் பெண் ஆட்டிடம் சொன்னது. “உனக்கு வேறு தழைகள் பறித்துத் தருகிறேன்!” என்றது. பெண் ஆடு, “அந்தத் தழைகள்தான் வேண்டும்!” என்று அடம் பிடித்தது. மறுமுறை முயற்சி செய்த ஆண் ஆடு, “இனிமேற்கொண்டு குனிந்தால், கிணற்றினுள் விழுந்து, இறந்துவிடுவேன்!” என்றது. “பரவாயில்லை; அப்படியும் பறித்துக்கொடு” என்றது பெண் ஆடு! பெண் ஆட்டின் பிடிவாதமான கோரிக்கையைக் கேட்ட ஆண் ஆடு, “என்னை என்ன பெண்டாட்டி சொல்வதைக் கேட்டுத் தனக்குத்தானே சிதை அடுக்கியுள்ள இந்த முட்டாள் அரசன் என்று நினைத்துவிட்டாயோ? நான் செத்தாலும் பரவாயில்லை என்று தழையைக் கேட்கிறாயே? உன்னைக் கொன்றுவிடுவேன்” என்று அவேசமாகப் பேசி, அந்தப் பெண் ஆட்டைத் தாக்கியது. இதனால் மிரண்டுபோன பெண் ஆடு, ஆண் ஆட்டிடம் பணிந்தது.எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டிருந்த கேகய மன்னன் ஆட்டிற்கு இருக்கும் ரோஷம்கூட நமக்கு இல்லையே? நாம் இப்படி இந்தஅற்ப ஸ்திரியின் பிடிவாதத்தால் ஒரு மன்னனுக்கு உரிய தகுதியையும் தன்மானத்தையும் இழந்துவிட்டு, உயிரைவிடத் தயாராகிவிட்டோமே என்று உணர்ந்து வருந்தினான். பின் தன் ராணியிடம் கோபமாகப் பேசி, அவளைத் தள்ளிவைத்து விட்டு, அரண்மனைக்குத் திரும்பி வந்து, நாட்டைத் திறமையுடன் ஆண்டுவந்தான். தர்ம சாஸ்திரமும், இல்லற தர்மத்தை விவரிக்கும் அத்தியாயத்தில், ஒரு மனிதனின் வாழ்க்கை முழுமையடைவதற்கு, ஒழுக்கமும், நேர்மையும், கற்பும் உள்ள பெண், மனைவியாக அமைவது எவ்வளவு அவசியமோ, அதே அளவிற்கு பெண்ணின் வாழ்வு சிறப்பாக அமைவதற்கு ஒழுக்கமும், மனைவியிடத்தில் அன்பும், பரிவும், தெய்வ பக்தியும் கொண்ட கணவன் அவசியம் என்பதை வலியுறுத்துகிறது.இத்தகைய தன்னிகரற்ற இல்லற தர்மத்தைக் கடைப்பிடித்துக் காட்டியவர்கள், ராம பிரானும், அன்னை ஸ்ரீசீதாபிராட்டியும் ஆவார்கள். தன் தேவி சீதையைத் தவிர பிற ஸ்திரிகள் அனைவரையும் தனது தாயாகவே பாவித்து வந்தவர் ராமபிரான்! இதுவே பிற்காலத்தில், வந்த பாரத மக்கள் அனைவருக்கும் இல்லற தர்மமாக நிலைத்து வருகிறது.மேலை நாட்டு நாகரீகம் நமது சமூகத்தில் வலுக்கட்டாயமாகப் புகுத்தப்பட்டபோது, “ஒருவனுக்கு ஒருத்தி; ஒருத்திக்கு ஒருவன் மட்டுமே” என்ற தன்னிகரற்ற ஒழுக்க முறை மறைந்து விட்டது. திருமணமே செய்துகொள்ளாத இருவர் ஒன்றாகச் சேர்ந்து வாழ்வதில் தவறில்லை என்ற அளவிற்கு இன்றைய இல்லற தர்மம்  தரம் தாழ்ந்துவிட்டது! ஒருகாலத்தில், பாரத தர்மம், மானிட சமூகத்திற்கே உதாரணமாகத் திகழ்ந்து வந்துள்ளது. இல்லற தர்மம் இருபாலருக்கும் பொதுவானதே!A.M. ராஜகோபாலன்

You might be intrested in

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi