திருவண்ணாமலை அக். 4: திருவண்ணாமலை அரசு பள்ளியில் தேசிய மனித உரிமை ஆணைய சிறப்பு கண்காணிப்பாளர் ஆய்வு செய்தார். தேசிய மனித உரிமை ஆணைய சிறப்பு கண்காணிப்பாளர் பால்கிஷன் கோயல், பல்வேறு மாவட்டங்களுக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தி வருகிறார். அதன்படி கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரசு மருத்துவமனை உள்ளிட்ட இடங்களை ஆய்வு செய்தார். அதன் தொடர்ச்சியாக, திருவண்ணாமலையில் உள்ள சண்முகா தொழிற்சாலை அரசு மேல்நிலைப் பள்ளியில் தேசிய மனித உரிமை ஆணைய சிறப்பு கண்காணிப்பாளர் பால்கிஷன் கோயல் ஆய்வு செய்தார். அப்போது, பள்ளியில் மாணவர்களுக்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் இருக்கிறதா, பதிவேடுகள் முறையாக பராமரிக்கப்படுகிறதா என பார்வையிட்டார். அதைத்தொடர்ந்து, பள்ளியில் வைக்கப்பட்டிருந்த முதலுதவி சிகிச்சை பெட்டியில் மருந்து மாத்திரைகள் இல்லாததை பார்த்து வேதனை அடைந்தார். அவற்றை முறையாக பராமரிக்க வேண்டும் என அறிவுறுத்தினார். மேலும், பள்ளி வளாகத்தை தூய்மையாக பராமரிக்க வேண்டும் என உத்தரவிட்டார். ஆய்வின் போது, முதன்மை கல்வி அலுவலர் கணேஷ் மூர்த்தி ஆர்டிஓ மந்தாகினி தாசில்தார் சரளா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.