பொள்ளாச்சி,மே29: பொள்ளாச்சியில் மனநல காப்பகத்தில் தங்கியிருந்த வாலிபரை அடித்துக்கொன்று புதைத்த வழக்கில் முக்கிய குற்றவாளி உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். கோவை அருகே சோமனூர் அருகே உள்ள மாதபூரை சேர்ந்தவர் ரவிக்குமார். இவரது மகன் வருண்காந்த் (22). மனநலம் பாதிக்கப்பட்ட இவரை, பொள்ளாச்சி மகாலிங்கபுரம் முல்லை நகரில் செயல்பட்டு ஒரு தனியார் மனநல காப்பகத்தில், கடந்த 3 மாதத்திற்கு முன்பு சேர்த்தனர். இந்நிலையில் காப்பக நிர்வாகிகள் வருண்காந்த் மாயமானதாக அவரது தந்தைக்கு தெரிவித்தனர். இதையடுத்து கடந்த 16ம் தேதி ஆழியார் போலீஸ் ஸ்டேஷனில், தனது மகன் மாயமானது குறித்து ரவிக்குமார் புகார் தெரிவித்தார்.
போலீஸ் விசாரணையில், மாயமானதாக கூறப்படும் வருண்காந்தை காப்பகத்தில் பணியாற்றும் சிலர் அடித்துக்கொலை செய்து, மனநல ஆலோசகரும் காப்பக நிர்வாகியுமான கவிதா (52) என்பவருக்கு சொந்தமான நடுப்புணி அருகே உள்ள பி.நாகூரில் உள்ள தோட்டத்தில் குழி தோண்டி புதைத்தது தெரியவந்தது. இதையடுத்து மாவட்ட எஸ்பி கார்த்திகேயன் உத்தரவின்பேரில் கடந்த 24ம் தேதி தோட்டத்தில் புதைக்கப்பட்டிருந்த வருண்காந்த் சடலத்தை தோண்டி எடுத்தனர்.
கொலைக்கு காரணமான காப்ப நிர்வாகத்தினர் மற்றும் ஊழியர்களை பிடிப்பதற்காக ஏஎஸ்பி கிருஸ்டிசிங் தலைமையில் 6 தனிப்படை அமைக்கப்பட்டது. இவ்வழக்கில் முதலில் காப்பக பாதுகாப்பாளர் ரித்தீஷ் (26) என்பவர் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து காப்பகத்தை நடத்தி வரும் நிர்வாகிகளில் ஒருவரான கிரிராம் (36), பணியாளர் ரங்கநாயகி (32), நிர்வாகி சாஜியின் தந்தை செந்தில் பாபு (55) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். 26ம் தேதி காப்பக பாதுகாப்பாளர்கள் சதீஷ் (25),ஷீலா (27) கைது செய்யப்பட்டனர்.
கொலை வழக்கில் தொடர்புடைய சாஜி (32), கவிதா(52), கவிதாவின் கணவர் லட்சுமணன் (56), மகள்கள் ஸ்ருதி (24), ஸ்ரேயா (26) ஆகியோர் தலைமறைவாகினர். இந்த நிலையில், திருவனந்தபுரத்தில் பதுங்கியிருந்த அவர்கள் 5 பேரையும் தனிப்படையினர் கைது செய்தனர். கடந்த 12ம் தேதி மனநல காப்பகத்தில் உள்ளவர்களை மேட்டுப்பாளையத்திற்கு சுற்றுலா அழைத்து செல்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் வருண்காந்தை மட்டும் காப்பகத்தில் விட்டுவிட்டு சென்றதாக தெரிகிறது. காப்பகத்தில் தனியாக இருந்த வருண்காந்த் சத்தம் போட்டு உள்ளார்.
இதில் ஆத்திரமடைந்த கவிதா, வருண்காந்தை தாக்கி உள்ளார். அதன்பிறகு அங்கு பணியாற்றிய அனைவரும் மாறி, மாறி தாக்கியதாக கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் கம்பத்தில் கட்டி வைத்து வருண் காந்தை கொடூரமாக தாக்கியுள்ளனர். படுகாயம் அடைந்தவர் சிறிது நேரத்தில் சம்பவ இடத்திலேயே இறந்தார். கொலையை மறைப்பதற்காக, வருண் காந்த் உடலை நடுப்பணியில் உள்ள கவிதாவின் தோட்டத்தில் புதைத்தது விசாரணையில் தெரியவந்தது. கொலை குறித்து மகாலிங்கபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 11 பேர் மீதும் கொலை செய்தது, கொலையை மறைத்தது, கூட்டு சதி, தடயங்களை அழித்தது என 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.