Saturday, June 21, 2025
Home மருத்துவம்ஆரோக்கிய வாழ்வு மனநலம் காக்கும்… அறிவுத்திறனை வளர்க்கும்!

மனநலம் காக்கும்… அறிவுத்திறனை வளர்க்கும்!

by kannappan

நன்றி குங்குமம் டாக்டர்இசை உடலியல்ரீதியாக பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்துவது சரிதான்… இசைக்கும், உணர்வுக்குமான தொடர்பு என்னவென்று உளவியலாளர் வீணா வாணியிடம் கேட்டோம் …‘‘சந்தோஷமான மனநிலையில் இருந்தால் ஃபாஸ்ட் பீட் சாங்ஸ், சோகமான மனநிலையில் இருந்தால் மெலடி பாடல்கள் என இரண்டு வகையான ப்ளே லிஸ்ட் பெரும்பாலானோரின் செல்போனில் இருக்கும். தன்னுடைய உணர்வுகளை எப்போதும் இசையோடு தொடர்புபடுத்திக் கொள்பவன் மனிதன். அது சந்தோஷமாக இருந்தாலும், சோகமா இருந்தாலும் மனிதனுக்கு இசைதான் நாடித் துடிப்பு. இசையைக் கேட்கும்போது ஒரு சில மூளை இணைப்புகள் உணர்ச்சிகளைத் தூண்டுகிறது என்பதை பல ஆராய்ச்சிகள் குறிப்பிடுகிறது. இசை மற்றும் மூளை எப்படி மனநிலை மற்றும் உணர்வுகளை மாற்றும் என்பதை, ஒரு பாட்டைக் கேட்கும்போது, உற்சாகம் தொற்றிக்கொண்டு நம்மை அறியாமலேயே கைகள் தாளமிடுவதையும், கால்கள் ரிதத்திற்கேற்ப அசைவதையும் கவனிக்க முடியும்.; இவ்வளவு ஏன்? தாயின் தாலாட்டை கேட்கத் தொடங்கும் குழந்தை தன்னிச்சையாக தன் அழுகையை நிறுத்தி, சிரிக்கத் தொடங்குவதை பார்த்திருப்போம். செரட்டோனின், ஆக்சிடோசின், டோபமைன் ஹார்மோன்களை இசை சுரக்கச் செய்கிறது. ஒரு பாடலை கேட்கும்போது உச்ச உணர்ச்சிகளை உருவாக்கி, டோபமைனின் அளவை அதிகரிக்கிறது. மூளையின் முக்கியமான நியூரோட்ரான்ஸ்மீட்டரான டோபோமைன்தான், வெகுமதி மற்றும் மகிழ்ச்சி மையங்களை கட்டுப்படுத்த உதவுகிறது. உலகளாவிய மொழியான இசைக்கு, மொழி, தேசம், இனம் என எந்தவிதமான எல்லைகளும் கிடையாது. எந்த மொழியின் பாட்டாக இருந்தாலும், அதன் லயத்திற்கும், தாளத்திற்கும் கட்டுப்படுவோம். மக்களோடு தொடர்பு கொள்ள வைக்கும் ஒரு உன்னதமான மொழி. இசைப்பவர், அதை கேட்பவர் இருவரிடத்திலும், ‘கட்டிப்பிடி ஹார்மோன்’ என்றழைக்கப்படும் ஆக்ஸிடோசின் சுரக்கிறது. இருவரையும் உச்ச உணர்ச்சிக்கு அழைத்துச் செல்கிறது. ஒருவர் அதிகபட்ச சந்தோஷத்தில் இருக்கும்போது உச்சபட்ச ஒலி (High Notes) பாடல்கள் கேட்பதும், அதுவே சஞ்சலத்தில் இருக்கும் போது மனதை கவரும் மெலடி பாடல்களாக கேட்பது, மனிதனின் உணர்வோடு இசைக்கு இருக்கும் தொடர்பை ஆய்வுகள் நிரூபிக்கின்றன. நம் உணர்ச்சிகள் நம் இதயத்திலிருந்து உணரப்படுவதாக ’நினைக்கிறோம். உண்மையில், மூளையின் வழியாகத்தான், உணர்ச்சி தூண்டுதல் பாகம் தொடர்பு கொள்ளப்படுகிறது. மூளை மற்றும் இதயத்தை இசை எவ்வாறு பாதிக்கிறது என்பதைப் பற்றிய புரிதல், மக்களுக்கிடையே உணர்ச்சி இணைப்பை உருவாக்க வழிவகுக்கிறது. இதனால்தான், பழங்காலம்தொட்டே, மக்களிடம் ஒரு விஷயத்தை கொண்டு சேர்க்கும் கருவியாக இசையை பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். தேசிய கீதம் தொடங்கி, நாட்டுப்பற்று பாடல்கள் மற்றும் சமூக சிந்தனைகளை இசைவழியாக மக்களிடம் கொண்டு சேர்க்கும்போது அதற்கு தனி ஆற்றல் இருப்பதை உணர முடியும். பள்ளி, கல்லூரியில் பயில்பவர்களில் சிலர் காதில் ஹெட்செட் மாட்டிக்கொண்டு பாட்டு கேட்டுக்கொண்டே படிப்பார்கள். இதில், அதெப்படி படிப்பில் கவனம் செல்லும் என பெற்றோர்களுக்கு சந்தேகம் வரும். மல்டி டாஸ்க் மாதிரிதான் இது. மூளையில் நரம்பியல் செயல்பாட்டைத் தூண்டி, கவனத்தை அதிகரிக்குமே தவிர, குறையச் செய்யாது. இசைக்கு, கற்றல் திறனை மேலும் அதிகரிக்கும் சக்தி உண்டு. இன்று பல இளைஞர்கள் ‘நான் டிப்ரஷன்ல இருக்கேன்’ என்று சொல்வதைக் கேட்க முடிகிறது. இவர்கள் தனக்கு ஏற்பட்டிருக்கும் மன அழுத்தத்தை தனக்குள்ளேயே வைத்து பூட்டிக் கொள்வதைவிட, ஒரு நல்ல தரமான இசையைக் கேட்பதன் மூலம் மன அமைதியைப் பெற முடியும். அதேபோல், உங்கள் கோபம், சோகம், சந்தோஷம் போன்றவற்றை பொருட்களை உடைப்பது அல்லது கத்துவதற்கு பதில் திறமையான பாடகராக இல்லாவிட்டாலும் கூட, பாட்டாக வெளிப்படுத்தலாம். இது மனஅழுத்தத்தை வெளியேற்றுவதற்கான (Stress Buster) மிகச்சிறந்த வழி. கிராமத்து மக்கள் நாற்று நடும்போது, ஏர் உழும்போது தன் வேலையின் சிரமத்தைக் குறைக்க பாட்டுப் பாடுவதை பார்த்திருப்போம். டெஸ்க் ஒர்க் செய்பவர்களும், கடுமையான வேலைச்சுமைக்கு நடுவே இடையிடையே ஹெட்போனில் பாட்டுக் கேட்கலாம்.இன்று வெளிநாடுகளில் புற்றுநோய்க்கான சிகிச்சையில் ‘மியூசிக் தெரபி’ முக்கிய இடம் பெற்றிருக்கிறது. காரணம் புற்றுநோயாளிகளின் வலி குறைப்பில் இந்த சிகிச்சை பெரும் உதவியாய் இருக்கிறது. இசை மற்றும் கணிதம் இரண்டுக்கும் இடையேயான தொடர்பினை அறியும் ஆர்வம் நாளுக்குநாள் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, ஒன்றை கற்றல் மற்றதுக்கு எவ்வாறு பயன் படுகிறது என்பதைப் பற்றியும், பள்ளி குழந்தைகளில் புலனுணர்வு வளர்ச்சி மற்றும் கற்றல் திறன்,குறிப்பாக கணிதத் திறனை அதிகரிக்க பயன்படுத்த முடியும் என்ற ரீதியில், கல்வியாளர்களும், அறிவியலாளர்களும் பல ஆய்வுகள் மேற்கொண்டு வருகின்றனர். ஓஷ்கோஷில் விஸ்கான்சின் பல்கலைக்கழகத்தின் உளவியலாளரான பிரான்செஸ் ரோசெர், தனது சமீபத்திய ஆய்வு ஒன்றில், ‘பாலர் பள்ளியில் பயிலும் குழந்தைகளில் பியானோ, தாளம் அல்லது குரலிசை கற்றுக் கொள்ளும் மாணவர்களின் கணிதத் தேர்வு மதிப்பெண்கள் அதிகரித்துள்ளதை கண்டுபிடித்துள்ளார். குறிப்பாக, தாளம் பயிலும் மாணவர்கள் மற்றவர்களைக் காட்டிலும், அதிக மதிப்பெண்களைப் பெற்றனர். இதில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை என்று சொல்லும் அவர், ‘ரிதம் என்பது, ஒரு தாளத்தின் துணைப் பிரிவு. தாளம் என்பது முற்றிலும் விகிதங்கள் மற்றும் விகிதாச்சாரங்களை உள்ளடக்கிய கணிதத்தோடு தொடர்புடையது. வாய்ப்பாட்டு மற்றும் இசைக்கருவிகள் இரண்டுக்குமே அடிப்படையானது தாளம். பாட்டாக இருந்தாலும், கருவியாக இருந்தாலும் நோட்ஸ்களின் ஏற்ற, இறக்கக் குறிப்புகளின் அமைப்புகளுக்கு ஏற்றவாறுதான் இசைக்க முடியும். இதேபோல்தான், கணிதத்திலும், எண்களை கூட்டல், பெருக்கல், கழித்தல் மற்றும் வகுத்தல்களின் அமைப்புகளை புரிந்து கொள்வதன் மூலம் செய்ய முடியும். இந்த வடிவங்களும், கலவைகளுமே, இசை மற்றும் கணிதத்தை மிகவும் ஒத்ததாக ஆக்குகிறது. இந்த இணைப்பு, குழந்தைகள் அறிவாற்றல் வளர்ச்சியில் ஒரு ஒருங்கிணைந்த பங்கினை அளிப்பதன் மூலம், அவர்கள் கணிதத்தில் சிறந்து விளங்க உதவுகிறது’ என்பதை உறுதி செய்திருக்கிறார். மேற்கத்திய இசை அமைப்பு, கர்நாடக இசையின் ராகங்கள் அல்லது ஜப்பானிய இசை எதுவாக இருந்தாலும், கணித ரீதியான குறியீட்டை ஒத்தே அமைந்திருக்கிறது என்பதும் இவரது வாதமாக இருக்கிறது. இதைப்போல் எண்ணற்ற ஆய்வுகள் இசைக்கும், கணிதத்திற்குமான தொடர்பை நிரூபிக்கின்றன!’’;என்.ஹரிஹரன்

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi