Saturday, June 14, 2025
Home மருத்துவம்ஆலோசனை மனதை புதுப்பிக்கும் பயணங்கள்

மனதை புதுப்பிக்கும் பயணங்கள்

by kannappan

நன்றி குங்குமம் தோழி பயணம் பெண்ணுக்கு சிறகளிக்கிறது. அவளை கூடு விட்டு வானம் பாயச் செய்கிறது. பெண்கள் படி தாண்டக்கூடாது என்ற கட்டுப்பாடுகளை காலமும் தேவையும் உடைத்தெறிந்துள்ளது. தாய்வழிச் சமூகத்தில் காடுகளை அளந்த பெண்ணின் பாதங்கள் இன்று உலகை அளக்கிறது. நாடுகளின் எல்லைகள் தாண்டும் அவளின் அனுபவங்கள் அறிவூட்டி அவளை வெற்றிப் பெண்ணாக மாற்றுகிறது. இன்று எல்லா வயதுப் பெண்களும் பயணிப்பதில் ஆர்வமாக உள்ளனர். வெவ்வேறு காரணங்களுக்காகப் பெண்கள் பயணிக்கின்றனர். இல்லத்தரசி, பிசினஸ் விமன் என பல தளங்களில் இயங்குகிறார் சுகந்தி சரவணன். இது வரை 11 நாடுகளுக்குப் பயணித்துள்ளார். சிக்னோரா என்ற பெயரில் பெண்களால் பெண்களுக்காக சுற்றுலா நிறுவனத்தை ஆரம்பித்துள்ளார். பெண்கள் பயணிப்பதில் உள்ள சவால்கள் மற்றும் சாத்தியங்கள் குறித்து விவரித்தார் சுகந்தி சரவணன். ‘‘கடந்த 15 ஆண்டுகளாக வெளிநாடு மற்றும் உள்நாட்டு சுற்றுலாக்களை நடத்தி வருகிறோம். ஆரம்ப காலத்தில் 30 சதவீதம் பெண்கள் மட்டுமே சுற்றுலாவிற்கு வருவார்கள். அதுவும் கணவருடன், குடும்பத்துடன் வரும் பெண்களே அதிகம். பெண்களுக்கு பயணங்களில் ஆர்வம் இருந்தாலும் அதற்கான அனுமதி கிடைத்ததில்லை. பாதுகாப்புக் கருதி அவர்களை வெளியில் அனுப்பவே தயங்கினர். பெண்களின் பயணத்துக்காகச் செய்யும் செலவு வீண் என்ற எண்ணமும் ஆண்களுக்கு இருந்தது. மெல்ல இந்த மனநிலை மாறி வருகிறது. இப்போது வெளிநாட்டு சுற்றுலாக்கள் வரும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கல்லூரிப் பெண்கள், தோழிகள் இணைந்து பயணிக்கின்றனர். இப்படியான சுற்றுலாத்திட்டங்களில் அவர்கள் ஒரு சில இடங்களுக்கு மட்டுமே செல்ல முடியும். வெளிநாடு செல்ல விருப்பம் இருந்தும் பாதுகாப்புக் காரணங்களுக்காக செல்ல முடியாத தனிப் பெண்களின் பயண ஆர்வங்களை நிறைவேற்றும் விதமாக பெண்களால் பெண்களுக்காக இயங்கும் சுற்றுலா நிறுவனத்தைத் துவங்கியுள்ளேன். பயணிப்பதில் ஆர்வம் உள்ள பெண்களே இதன் டூர் ஆபரேட்டர்களாகவும் உள்ளனர். இன்று பெண்கள் உலகின் எந்த நாட்டுக்கும் பயணிப்பது சாத்தியமாகி வருகிறது. பெண்கள் பயணிப்பதால் தன்னம்பிக்கை அதிகரிக்கிறது. குடும்பப் பொறுப்புகளை மட்டுமே சுமக்கும் பெண்கள் தனக்குள் இருக்கும் திறனை வெளிப்படுத்தும் வாய்ப்பு உருவாகிறது. வெளிநாடுகளில் பெண்கள் ஈடுபடும் புதிய தொழில்கள் பற்றி இவர்களும் யோசிக்கிறார்கள். ஜப்பானில் தொழிலதிபர்களாக உள்ள பெண்கள் தங்கள் வேலைக்கு மட்டுமே அதிக நேரம் செலவிடுகின்றனர். குடும்பப் பொறுப்புக்களை எந்நேரமும் நினைத்துக் கொண்டிருப்பதில்லை. பெண் எந்தளவுக்கு தொழிலில் சாதிக்க முடியும் என்பதை ஜப்பானியப் பெண்களிடம் கற்றுக் கொள்ளலாம். இப்படி ஒவ்வொரு நாட்டிலும் பெண்களின் மனதை மாற்றும் பல அனுபவங்கள் கிடைக்கும். வரும் புத்தாண்டில் அதிகபட்ச நாடுகளுக்குப் பயணிக்க வேண்டும் என்பதே என் விருப்பம். மனநிலை சரியில்லாவிட்டால் கூட பக்கத்தில் உள்ள ஏதாவது ஒரு இடத்துக்குப் போய்விடுவேன். விட்டு விடுதலையாகிப் பறக்கும் அனுபவம் எல்லாப் பெண்ணுக்குமே அவசியம்” என்கிறார் சுகந்தி. * ஷண்முகப்பிரியா கல்லூரிக் காலத்திலேயே பல ஊர்களுக்கு பயணித்திருக்கிறார். “குடும்பத்துடன் டூர் போகும் போது பெண்கள் அங்கேயும் பொறுப்புகளை சுமந்து கொண்டே இருக்கிறார்கள். பெண்கள் நட்பு வட்டத்துடன் டூர் போகும் போது தான் தன்னை ஸ்பெஷலாக உணர்கின்றனர். உண்மையாகவே அவர்கள் டென்ஷன் மறந்து ரிலாக்ஸ் ஆக முடியும். பெண் தன்னோட சுய மதிப்பீட்டை மேம்படுத்திக் கொள்ள முடியும். ஊட்டி, கொடைக்கானல் மாதிரியான இடங்களுக்கு 20 பேர் வரைக்கும் கும்பலாகச் சென்று வந்திருக்கிறோம். ஒத்த நட்புகளோட பயணிக்கும் போது போற இடம் முக்கியமில்லை. பயணிக்கிறதே சந்தோஷமா மாறிடும். இளம் வயதுப் பெண்களுக்கு இந்த மாதிரி அனுபவங்கள் தேவை. எம்.காம். படிச்சிட்டு டீச்சரா வேலை பார்த்துட்டு இருந்த நான் ஒரு டூர் கம்பெனில டூர் ஆர்கனைசரா சேரப்போறேன். அடுத்த வருஷம் நிறையப் பெண்களோட நாடுகளின் எல்லைகள் கடந்து பயணிக்கிறது தான் என்னோட விருப்பம்’’ என்கிறார் ஷண்முகப்பிரியா. * திருச்சியை சேர்ந்த ரமணிப்பாட்டி 80 வயதை சமீபத்தில் தொட்டிருக்கிறார். யோகா, ஓவியம் என எந்தக் கலையானாலும் அசத்தும் இந்தப் பாட்டி சுற்றுலா என்றால் சிறுமியின் மனநிலைக்குப் போய்விடுகிறார். அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்றவர். கடந்த 17 ஆண்டுகளாக திட்டம் போட்டு சுற்றுலா சென்று வருகிறார். தனது 79வது வயதில் ஆஸ்திரேலியா சென்றது மறக்க முடியாத அனுபவம் என்கிறார் ரமணிப் பாட்டி. “கைலாஷ் மனசரோவர் தான் நான் முதலில் டூர் போன இடம். டூர் போகும் இடங்களில் புதிய மனிதர்கள், அற்புதமான காட்சிகள் எல்லாம் மனசை சந்தோஷப்படுத்துகிறது. அதற்காகவே நான் டூர் போறேன். 100 வயதானாலும் இப்படியே சுறுசுறுப்பாக இருப்பேன். அடுத்து ஸ்கேண்டிநேவியா டூருக்கான பிளானில் இருக்கிறேன். பெண்ணோட மனசு மகிழ்ச்சியா இருந்தா எப்பவும் உற்சாகமா இருக்கலாம். இதற்காகப் பெண்கள் பயணிக்கணும்” என்கிறார் ரமணி பாட்டி.* ஷைபி மேத்யூ, ஸ்டாண்டிங் பைக் ரைடிங்கில் சாதனைகள் புரிந்தவர். தமிழ்நாடு முழுக்கவும் தன்னோட பைக்லயே சுற்ற திட்டமிட்டு வருகிறார். “என்னோட பாதுகாப்புக்காகத்தான் நான் பைக் ஓட்டவே கத்துகிட்டேன். இது வரை உலக சாதனை படைக்கிறதுக்காக டிராவல் பண்ணினேன். இப்போ பெண்கள் பாதுகாப்புக்காக தமிழ்நாடு முழுக்க ஸ்டாண்டிங் பைக் ரைடிங் போக பிளான் பண்ணிட்டு இருக்கேன். ஒவ்வொரு மாவட்டத்திலும் பெண்களை சந்திச்சுப் பேசப் போறேன். இயற்கைப் பாதுகாப்பு, பெண்கள் பாதுகாப்பு இரண்டையும் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமா இந்தப் பயணம் இருக்கும். பெண்களைப் பெண்களே பாதுகாக்கும் நிலமை வரணும். ஒவ்வொரு பெண்ணும் உதவி தேவைப்படும் பெண்ணுக்கு உதவணும். இது தான் என்னோட புத்தாண்டு லட்சியம்” என்கிறார் ஷைபி. * மதுரை திருமங்கலத்தை சேர்ந்த சூர்யா இல்லத்தரசி. கடந்த மூன்று ஆண்டுகளாகத் தன் கணவருடன் வெளிநாடுகளுக்குச் சுற்றுலா சென்று வருகிறார். “சின்ன வயசுலயே ஊர் சுற்றும் ஆசை இருந்தது. குழந்தைகள் எல்லாம் செட்டில் ஆனதற்குப் பிறகு தான் கணவரோட டூர் போகும் வாய்ப்புக் கிடைத்தது. நான் டூர் போகும் போது கவலைகள் மறந்து ரிலாக்சா உணருகிறேன். வருஷத்துக்கு ஒரு டூராவது போகவேண்டும் என்று ஆசைப்படுகிறேன். எனக்கு ஆங்கிலம் தெரியாததுனால வெளிநாட்டுப் பெண்களோட என்னால பேச முடியலை. சேலை கட்டுற நம்ம கலாச்சாரத்தை அவங்க ரொம்பவே ரசிக்கிறாங்க. டிராவல் பண்ணும் போது புது ஃபிரண்ட்ஷிப் கிடைக்குது. என்னோட தோழிகள் எண்ணிக்கை அதிகமாகியிருக்கு” என்கிறார் சூர்யா. – யாழ் ஸ்ரீதேவி

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi