ஈரோடு, நவ. 8: மத நல்லிணக்கத்தை பேணவும், மக்கள் ஒற்றுமையை பாதுகாத்திடவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்த பொதுக்கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம், சென்னிமலை பகுதியில் பொதுமக்களின் மத, இறை நம்பிக்கையை பயன்படுத்தி பதட்டமான சூழலை உருவாக்கி சில சக்திகள் அரசியல் ஆதாயம் தேடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.
அதை முறியடித்து மதநல்லிணக்கத்தை பேணவும், மக்கள் ஒற்றுமையை பாதுகாத்து சகோதரத்துவத்துடன் அமைதியாக வாழ வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து நாளை (9ம் தேதி) சென்னிமலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பொதுக்கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டது. இதில், மதச்சார்பற்ற இந்தியா கூட்டணி கட்சிகளும் பங்கேற்கும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், தீபாவளி பண்டிகை காலமாதலால் வணிகர்கள், வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்கள், பொதுக்கூட்டத்தை ஒத்தி வைக்குமாறு கேட்டுக் கொண்டனர்.
அதன்படியும், பருவமழையை கருத்தில் கொண்டும் பொதுக்கூட்டம் ஒத்தி வைக்கப்படுவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ஆர்.ரகுராமன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தெற்கு மாவட்டச் செயலாளர் எஸ்.டி.பிரபாகரன் ஆகியோர் விடுத்த அறிக்கையில் தெரிவித்துள்ளனர். மற்ற கட்சி தலைவர்களின் கலந்தாலோசனையுடன் பொதுக்கூட்டம் நடைபெறும் தேதி, இடம் ஆகியவற்றை மாநில தலைமை அறிவிக்கும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.