சேத்துப்பட்டு: சேத்துப்பட்டில் மது பாட்டில்கள், குட்கா பொருட்கள் விற்பனை செய்த இரண்டு கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். சேத்துப்பட்டு வந்தவாசி சாலை காமராஜர் சிலை அருகே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா போன்ற பொருட்களை வியாபாரிகளுக்கு விற்பனை செய்த விநாயகம் மகன் தினேஷ் (26), இதேபோல் செஞ்சி சாலை போலீஸ் செக்போஸ்ட் அருகே அரசு மது பாட்டில்கள் பதுக்கி அதிக விலைக்கு 24 மணி நேரமும் விற்பனை செய்து, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்த கார்த்தி(36), அவருடைய மனைவி ஜெய ஆகியோர் மீது சேத்துப்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து ஏற்கனவே கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் மீண்டும் கடைகளை திறந்து வியாபாரம் செய்து கொண்டிருந்த நிலையில் உணவு பாதுகாப்பு அலுவலர் சுப்பிரமணி, சேத்துப்பட்டு சப்-இன்ஸ்பெக்டர் நாராயணன் மற்றும் போலீசார் இரண்டு கடைகளுக்கும் சென்று நேற்று சீல் வைத்தனர். மேலும் அரசு உத்தரவு வரும் வரை இக்கடையை திறக்க கூடாது, மீறி திறந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து நோட்டீஸ் ஒட்டினர். மேலும் இவர்கள் தடை செய்யப்பட்ட பொருட்களை எங்கு பதுக்கி வைத்துள்ளனர் எனவும் விசாரித்து வருகின்றனர்.