பட்டிவீரன்பட்டி, ஆக. 5: பட்டிவீரன்பட்டி அருகே உள்ள அய்யம்பாளையத்தை சேர்ந்தவர் செந்தில்குமார் (45). நேற்று முன்தினம் அய்யம்பாளையத்தைச் சேர்ந்த காளிமுத்து (25), கண்ணன் (24) மற்றும் தேனி மாவட்டம் கெங்குவார்பட்டியைச் சேர்ந்த புவனேஸ்வரன் (27) ஆகிய 3 பேரும் சேர்ந்து செந்தில்குமார் இடத்திற்கு பின்புறம் உள்ள காலி இடத்தில் மது அருந்தியுள்ளனர். அப்போது அங்கு வந்த செந்தில்குமார் அவர்களிடம் இந்த இடத்தில் ஏன் மது அருந்துகிறீர்கள்? என கேட்டுள்ளார்.
இதில் ஆத்திரம் அடைந்த அவர்கள் 3 பேரும் சேர்ந்து செந்தில்குமாரை அங்கிருந்த கற்களை எடுத்து தாக்கியுள்ளனர். அப்போது அவ்வழியாக அய்யம்பாளையத்தைச் சேர்ந்த சின்னன் (44) என்பவர் தடுக்க வந்துள்ளார். அவரையும் அவர்கள் கல்லால் தாக்கியுள்ளனர்.
இந்த தாக்குதலில் இருவரின் மண்டை உடைந்து பலத்த காயம் ஏற்பட்டது. அதன் பின்பு பலத்த காயமடைந்த இருவரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு திண்டுக்கல் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரில் பட்டிவீரன்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து காளிமுத்து, கண்ணன், புவனேஸ்வரன் ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரிக்கின்றனர்.