மதுரை, ஆக. 13: மதுரை கோட்ட ரயில் நிலைய அதிகாரிகள் சங்கத்தின் சார்பில், ஸ்டேஷன் மாஸ்டர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேற்கு நுழைவு வாயில் பகுதியில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மதுரை கோட்ட ரயில் நிலைய அதிகாரிகள் சங்க தலைவர் பிரபுடேவிட் தலைமை வகித்தார். கோட்ட செயலர் ஜெகதீசன் முன்னிலை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டதில் கடம்பூர் முதல் அம்பாத்துரை வரையிலும், மணப்பாறை, கங்கை கொண்டான், தாழையூத்து ரயில் நிலையங்களில் கூடுதல் நிலைய அதிகாரிகளை நியமிக்க வேண்டும்.
மிக அதிக வேலைப்பளு உள்ள மதுரை ரயில் நிலைய கட்டுப்பாடு அறையின் நிலைய அதிகாரிகளுக்கு, வாரம் 36 மணி நேர பணி நேரம் வழங்க வேண்டும். 60 மணிநேர பணிநேரத்தை ரத்து செய்து, அனைத்து நிலைய அதிகாரிகளுக்கும் 48 மணி நேர பணி வழங்க வேண்டும். காரைக்குடி ரயில் நிலையத்தில் நடைமேடை நிலைய அதிகாரியை உடனடியாக நியமனம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.