மதுரை, ஜூன் 5: மதுரை ரயில் நிலையத்தை மையமாக கொண்டு, சென்னை, டில்லி, மும்பை, கோவை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும் ரயில்கள் சென்று வருகின்றன. மதுரை ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு கிழக்கு மற்றும் மேற்கு நுழைவாயில்களில் டிக்கெட் எடுக்கும் வசதிகளை ஏற்படுத்திள்ளனர். எந்த நேரமும் பயணம் செய்யும் வசதிகளை கொண்டுள்ளதால், மதுரை ரயில் நிலையத்திற்கு வந்து செல்வோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ரயில்களில் செல்ல வரும் பயணிகள் பலரும் கிழக்கு நுழைவாயில் வழியாக வந்து செல்கின்றனர். ரயிலுக்காக பலர் காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது. பலர் கிழக்கு நுழைவாயில் பகுதியில் காத்திருக்கின்றனர்.
இதுபோன்ற நேரங்களில் சமூக விரோதிகள் பலர் ரயில் பயணிகள் போல நடித்து பொதுமக்களிடம் இருந்து செல்போன், பணத்தை திருடிச் செல்கின்றனர். இதனால் பயணத்திற்கு வரும் நபர்கள் அவதிப்படுகின்றனர். எனவே, ரயில்வே போலீசார் இரவு நேரத்தில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என பயணிகள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது. இதற்காக ரயில்வே போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் ரோந்து பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என பயணிகள் வலியுறுத்தி உள்ளனர்.