வேலூர், ஜூன் 24: மதுரையில் நடந்த முருகன் மாநாடு அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று வேலூர் அரசு பல்நோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை வளாகத்தை ஆய்வு செய்ய வந்த பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு கூறினார். வேலூரில் ரூ.198 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட அரசு பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையை வரும் 25ம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார்.
இந்நிலையில் மருத்துவமனையின் கட்டுமான பணிகளை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார். அவருடன், கலெக்டர் சுப்புலட்சுமி, டிஆர்ஓ மாலதி ஆகியோர் உடனிருந்தனர். தொடர்ந்து அமைச்சர் எ.வ.வேலு நிருபர்களிடம் கூறியதாவது:
முதல்வரை பொருத்தவரை கல்வியும், மருத்துவமும் இரண்டு கண்களாக உள்ளது. அதன் அடிப்படையிலும், வேலூர் மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்றும், இங்கு அரசு பல்நோக்கு உயர் சிகிச்சை பிரிவு மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. இதனை (நாளை) வரும் 25ம் தேதி தமிழக முதல்வர் திறந்து வைக்கிறார். அதோடு சேர்க்காட்டில் கட்டப்பட்டுள்ள தாலுகா மருத்துவமனை, 9 ஆரம்ப சுகாதார நிலையங்களையும் காணொளி காட்சி மூலம் திறந்து வைக்கிறார்.
தொடர்ந்து மாலை 5 மணிக்கு அணைக்கட்டில் மாவட்ட செயலாளர் எம்எல்ஏ ஏ.பி.நந்தகுமாரால் கட்டப்பட்டுள்ள கட்சி அலுவலகம், நூலகம், கலைஞர் சிலையை திறந்து வைக்கிறார். அதன் பின்னர் ஆம்பூர், வாணியம்பாடி வழியாக ஜோலார்பேட்டை சென்று அங்கு மக்களை சந்திப்பதுடன், திருப்பத்தூரில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் சிலையையும் திறந்து வைக்கிறார்.
மறுநாள் 26ம் தேதி திருப்பத்தூர் மாவட்டத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கியும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், முடிவுற்ற பணிகளையும், நெடுஞ்சாலை பாலங்களையும் திறந்து வைக்கிறார். முதல்வர் வருகைக்காக வேலூர், திருப்பத்தூர் மாவட்ட மக்கள் ஆவலுடன் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள்.
வேலூர் அரசு பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் அனைத்து பணிகளும் முடிந்துள்ளது. தூய்மை பணிகள் மட்டும் நிலுவையில் உள்ளது. மருத்துவமனை செயல்பாட்டுக்கு வந்ததும் படிப்படியாக தூய்மை பணி குறையும். அதேசமயம் , முதலில் புறநோயாளிகள் பிரிவுதான் செயல்பாட்டுக்கு. அதைதொடர்ந்து அடுத்தடுத்து மகப்பேறு மருத்துவர் பிரிவும், குழந்தைகள் பிரிவும், பச்சிளம் குழந்தைகள் பிரிவும் வரும். இப்படி படிப்படியாகத்தான் ஒரு புதிய மருத்துவமனையை செயல்பாட்டிற்கு கொண்டு வர முடியுமே தவிர ஒரே நேரத்தில் அனைத்து பிரிவுகளும் செயல்பாட்டிற்கு வராது.
தொடர்ந்து மதுரை முருகன் மாநாடு தொடர்பாக கேட்டதற்கு,மதுரை முருகன் மாநாட்டில் பெரியார் குறித்து காணொளி வெளியிடப்பட்டுள்ளது. பொதுவாக பார்த்தால், தமிழ் கடவுள் முருகனுக்கு நெருக்கமானவன் நான்தான். ஏனெனில் அவரது கையில் வேல் உள்ளது. என் பெயரிலும் வேல் உள்ளது. தமிழ்நாடு அரசின் சார்பில் அறநிலையத்துறை சார்பில் ஓராண்டுக்கு முன்பு முத்தமிழ் முருகன் மாநாடு பழனியில் நடத்தப்பட்டது. அதில் எந்த அரசியல் அடையாளமும் கிடையாது. அனைத்து தரப்பினரும், அனைத்து அடிகளார்களும் கலந்து கொண்டனர்.
ஆனால் மதுரையில் நடத்தப்பட்ட மாநாடு அரசியல் உள்நோக்கத்துடன் நடத்தப்பட்டது. அவர்கள் போட்ட தீர்மானமே அரசியல் உள்நோக்கத்தோடு உடையதுதான். முருகன் மாநாட்டுக்கும், இந்துக்கும், தேர்தலுக்கும் என்ன சம்பந்தம். எனவே, தேர்தலுக்காக போடப்பட்ட மாநாட்டில் எப்படி எங்கள் முதல் தலைமுறையாய் இருக்கும் பெரியாரையும், அண்ணாவையும் ஏற்றுக் கொள்வார்கள்.
அவர்களை பொறுத்தவரை ஒவ்வொரு மாநிலத்திலும், தங்கள் இருப்பிடத்தை காட்டிக்கொள்வதற்காக அந்தந்த மாநில கடவுள்களை கையில் எடுத்துஅரசியல் செய்பவர்கள். பெரியாரையோ, அண்ணாவையோ பாராட்டுவார்கள் என நாங்கள் எதிர்பார்க்கவும் மாட்டோம். அவர்களும் அதை செய்ய மாட்டார்கள். இதெல்லாம் தமிழ்நாட்டு மக்களுக்கு புரியும். தேர்தல் நேரத்தில் அதற்கான பதிலை தருவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.